ஜோகூர் மாநிலத்திலுள்ள பனைமரத் தோட்டம் ஒன்றுக்கு அருகே மூன்று யானைகள் நஞ்சு கொடுத்துக் கொல்லப்பட்டதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். ஜோகூரின் கிழக்குப் பகுதியில் அந்த யானைகளின் சடலங்கள் கண்டுபிடிக்கப்பட்டதாக உள்ளூர் போலிசார் தெரிவித்தனர்.
மாண்ட யானைகள் பனைமரத் தோட்டத்திற்கு அருகில் இருக்கும் வனக்காப்பகத்தில் வசிக்கும் யானைக்கூட்டதைச் சேர்ந்தவை என நம்பப்படுகிறது.
18 வயதுக்கும் 22 வயதுக்கும் இடையிலான அந்த மூன்று யானைகளுக்கு நஞ்சு கொடுக்கப்பட்டதாகப் பிரேதப் பரிசோதனையின் வழி கண்டுபிடிக்கப்பட்டதாக வனவிலங்கு, தேசிய பூங்காத் துறையின் தலைமை இயக்குநர் அப்துல் காதிர் அபு ஹஷிம் செய்தியாளர்களிடம் தெரிவித்தார். இந்தச் சம்பவத்திற்குக் காரணமானவர்கள் யார் என்பது கண்டுபிடிக்கப்படவில்லை.
மலேசியாவில் கிட்டத்தட்ட 1,500 காட்டு யானைகள் வசிப்பதாக வனவிலங்குக் காப்பாளர்கள் குத்துமதிப்பாகக் கூறுகின்றனர்.

