மலேசியாவின் ஊழல் தடுப்பு ஆணையத்தின் தலைவராக திருவாட்டி லத்தீஃபா கோயா நியமிக்கப்பட்டது குறித்து பிரதமர் மகாதீர் முகமது தெளிவு
படுத்த வேண்டிய அவசியம் உள்ளதாக பிகேஆர் தலைவர் அன்வார் இப்ராகிம் தெரிவித்து உள்ளார்.
அந்தப் பதவிக்கு லத்தீஃபாவை பிரதமர் நியமித்ததாக வெளியிடப்பட்ட அறிவிப்பின் மூலம் மட்டுமே தாம் அதுபற்றி அறிந்ததாக அவர் கூறியதாக பெர்னாமா தெரிவித்துள்ளது.
ஊழல் தடுப்பு ஆணையராக இருந்த முகமது சுக்ரி அப்துல் என்பவருக்குப் பதிலாக முன்னாள் பிகேஆர் கட்சிப் பிரமுகர் திருவாட்டி லத்தீஃபா கடந்த சனிக்கிழமை நியமிக்கப்பட்டது முதல் அது தொடர்பான விமர்சனங்கள் வந்த வண்ணம் உள்ளன.
அமைச்சரவையைக் கலந்து ஆலோசிக்காமல் தாம் இந்த நியமனத்தைச் செய்ததாக டாக்டர் மகாதீர் கூறியிருந்தார்.
இந்நிலையில் திருவாட்டி லத்தீஃபா நேற்று ஊழல் தடுப்பு ஆணையத்தின் தலைமை ஆணையராகப் பொறுப்பேற்றுக் கொண்டார்.
பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர் தமது நியமனம் தொடர்பாக எழுந்துள்ள விமர்சனங்கள் குறித்து கருத்து தெரிவித்தார்.
கேள்வி எழுப்பவும் குறைகூறவும் எல்லாருக்கும் உரிமை உண்டு என்றார் அவர்.
"இருப்பினும் என்னுடைய பணி தெளிவானது. எங்கு ஊழல் நடந்தாலும் அதனை எதிர்த்துப் போராடுவது என் வேலை. ஆணையத்தின் அதிகாரிகள், பொதுமக்கள் ஆகியோரின் ஒத்துழைப்போடு மலேசியாவை லஞ்ச ஊழலற்ற சமூகமாக மாற்றுவோம்.
"ஊழலற்ற சூழலில் வாழவும் வேலை செய்யவும் ஒவ்வொரு மலேசிய குடிமகனுக்கும் உரிமை உண்டு," என்று அவர் கூறியதாக மலேசியகினி செய்தித்தளம் குறிப்பிட்டது.
முகைதீன்: கேள்வி எழுப்புவது நியாயமற்றது
இதற்கிடையே, திருவாட்டி லத்தீஃபாவின் நியமனத்தை சர்ச்சை ஆக்கவேண்டாம் என உள்துறை அமைச்சர் முகைதீன் யாசின் கேட்டுக்கொண்டுள்ளார்.
இந்த நியமனம் பிரதமரின் நிர்வாக அதிகாரத்துக்கும் அரசமைப்புக்கும் உட்பட்டே செய்யப்பட்டு இருப்பதாக அவர் நேற்று செய்தியாளர்களிடம் கூறினார்.
சரியான நடைமுறைகளைப் பின்பற்றியே நியமனம் நடைபெற்று இருப்பதால் அது குறித்து எந்த ஒரு கட்சியும் கேள்வி எழுப்புவது நியாயமாகாது.
இந்த நியமனம் தொடர்பாக எழுந்துள்ள சர்ச்சை தற்போது அரசியலாக்கப்பட்டுள்ளது. இதனை மக்கள் பல்வேறு வழிகளில் புரிந்துகொள்ளக்கூடும் என்றார் திரு முகைதீன்.
ஊழல் தடுப்பு ஆணைய தலைவரின் நியமனம் சரியான நடவடிக்கையே என்று அவர் பாராட்டு தெரிவித்துள்ளார்.

