மெல்பர்னில் ஊபரின் பறக்கும் டாக்சி சேவை

மெல்பர்னில் ஊபரின் பறக்கும் டாக்சி சேவை

1 mins read
0ab56ffd-53a8-484a-93e0-80ee47be363a
வா‌ஷிங்டனில் நேற்று முன்தினம் நடைபெற்ற ஊபர் நிறுவன நிகழ்ச்சியில் பறக்கும் கார் காட்சிக்கு வைக்கப்பட்டிருந்தது. வரும் 2023ல் டாக்சி சேவையைத் தொடங்க 'ஊபர்ஏர்' திட்டமிட்டுள்ளது. இதற்காக மெல்பர்ன் நகரையும் 'ஊபர்ஏர்' தேர்ந்தெடுத்துள்ளது. படம்: ஏஎஃப்பி -

மெல்பர்ன்: ஊபர் நிறுவனம் தனது கனவுத் திட்டமான பறக்கும் டாக்சி சேவையை முதல் முறையாக அமெரிக் காவுக்கு வெளியே மெல்பர்ன் நகரில் அறிமுகம் செய்ய முடிவு செய்துள்ளது.

டல்லாஸ், லாஸ் ஏஞ்சலசுக்கு அடுத்தபடியாக மெல்பர்ன் நகரம் ஊபரின் டாக்சி சேவைக்குத் தேர்வு செய்யப்பட்ட மூன்றாவது நகரமாகும்.

வரும் 2023ஆம் ஆண்டில் வர்த்தக ரீதியில் பறக்கும் டாக்சி சேவையை வழங்கும் நோக்கோடு 2020ஆம் ஆண்டில் சோதனை அடிப்படையில் டாக்சி சேவைகளைத் தொடங்க 'ஊபர்ஏர்' திட்டமிட்டுள்ளது.

நகரத்தின் போக்குவரத்து நெரிசலைக் குறைக்க ஆகாய வெளி டாக்சி சேவை உதவும் என்று 'ஊபர்ஏர்' கூறியது.

நகரங்கள் வளர்ச்சி அடையும் போது போக்குவரத்துக்குத் தனியார் கார்களையே முழுமையாக நம்பி யிருக்க முடியாது என்று ஊபர் நிறுவனத்தைச் சேர்ந்த எரிக் ஆலிசன் கூறினார்.

உதாரணமாக, மெல்பர்ன் மத்திய வர்த்தக வட்டாரத்திலிருந்து 19 கிலோ மீட்டர் தொலைவில் உள்ள விமான நிலையத்துக்கு 'ஊபர்ஏர்' மூலம் பத்து நிமிடங்களில் சென்றுவிடலாம். தரை வழியாக காரில் சென்றால் ஒரு மணி நேரமாகும் என்றார் அவர்.

பறக்கும் டாக்சி சேவையை வழங்க மற்ற நிறுவனங்களும் முயற்சிகளை எடுத்துவருகின்றன.

இதில் ஊபர்ஏர் முதல் அடியை எடுத்துவைத்துள்ளது.