தலைவிரித்தாடும் மலேசியா ஓரினச் சேர்க்கை காணொளி விவகாரம்

மலேசிய அரசியல் களத்தைத் திக்குமுக்காட வைத்துள்ள ஓரினச் சேர்க்கை காணொளி விவகாரம் புதிய திருப்பங்களுடன் தலைவிரித்தாடுகிறது. 

காணொளியில் அரசாங்க அதிகாரி முஹம்மது ஹஸிக் அப்துல் அஸிஸுடன் ஓரினச் சேர்க்கையில் ஈடுபட்டதாக மலேசிய பொருளியல் விவகார அமைச்சர் அஸ்மின் அலி மீது குற்றம் சாட்டப்பட்டுள்ளது. 

அதை மறுத்துவரும் அமைச்சர் அஸ்மின் இது தமது அரசியல் வாழ்க்கையை நாசப்படுத்தும் செயல் என கூறியுள்ளார். 

அவ்வாறு மறுத்த சில மணி நேரங்களில் நேற்று இரண்டாவது காணொளி சமூக ஊடகங்களில் பரவியது.

இந்நிலையில் ‘ஒட்டாய் ரிஃபோர்மாசி’ எனும் மக்கள் உரிமை கூட்டணியின் தலைவர் இத்ரிஸ் அகமது இந்த விவகாரம் குறித்த விசாரணை முடியும்வரை அமைச்சர் அஸ்மின் ‘ஓய்வெடுக்கவேண்டும்’ என்று கூறியுள்ளார். 

அவர் தொடர்பான காணொளி குறித்து போலிசாரும் மலேசிய ஊழல் தடுப்பு ஆணையமும் விசாரணையை நடத்த அமைச்சர் தமது அதிகாரபூர்வ பணிகளிலிருந்து ஓய்வு பெறவேண்டும் என்று தங்களின் அமைப்பு பரிந்துரைப்பதாகச் செய்தியாளர்களிடம் தெரிவித்தார். 

பக்கத்தான் ஹரப்பான் அரசாங்கத்தின் நற்பெயரைக் கட்டிக்காக்க வேண்டும் என்பதற்காக தாம் இந்தப் பரிந்துரையை வழங்குவதாகவும் குறிப்பிட்டார். 

இந்த விவகாரம் குறித்து அமைச்சருக்கு ஆதரவாக மலேசிய பிரதமர் மகாதீர் முகமது கருத்துரைத்தது குறித்தும் அவர் கேள்வி எழுப்பினார். 

இதுபோன்ற விவகாரம் 1998ஆம் ஆண்டு அன்றைய துணைப் பிரதமராக இருந்த அன்வார் இப்ராகிம் தொடர்பில் வெளிவந்தபோது பிரதமர் மகாதீர் கையாண்டவிதம் முற்றிலும் மாறுபட்டது என்று குறிப்பிட்ட இத்ரிஸ், பிரதமர் நடுநிலையாக இருப்பார் என்று எதிர்பார்ப்பதாகக் கூறினார்.