எண்ணெய்க் கப்பல்கள் மீதான தாக்குதல்: குற்றச்சாட்டுகளை ஏற்க மறுக்கும் ஈரான்

ஓமான் வளைகுடா பகுதியில் இரு எண்ணெய்க் கப்பல்கள் மீது நடத் தப்பட்ட தாக்குதலுக்கு ஈரான்தான் காரணம் என்ற அமெரிக்காவின் குற்றச்சாட்டிற்கு ஈரான் வெளி யுறவுத் துறை அமைச்சு மறுப்புத் தெரிவித்துள்ளது. மேலும் அடிப் படை ஆதாரங்கள் ஏதுமின்றி அமெரிக்கா தங்கள் மீது குற்றம் சாட்டுவதாக ஈரான் நேற்று சாடியது.

“எந்தவொரு ஆதாரமுமின்றி அமெரிக்க நிர்வாகம் ஈரானுக்கு எதிராக திடீரென குற்றச்சாட்டு களை முன்வைத்துள்ளது,” என்று ஈரானிய வெளியுறவு அமைச்சர் ஜாவத் ஸாரிஃப் நேற்று டுவிட்டரில் பதிவிட்டார்.

எண்ணெய்க் கப்பல்கள் தாக் கப்பட்டதற்கு ஈரானே காரணம் என்று அமெரிக்கா குற்றஞ்சாட்டி இருந்தது. தாக்குதலுக்குப் பயன் படுத்தப்பட்ட ஆயுதம், இத்தகைய தாக்குதல்களை நிகழ்த்துவதற்குத் தேவைப்படும் திறன், கப்பல்கள் மீது ஏற்கெனவே நிகழ்த்தப்பட்டு இருந்த தாக்குதல்கள் மற்றும் உளவுத் தகவல்களின் அடிப்ப டையில் பார்க்கும்போது ஈரானே இத்தாக்குதலை நிகழ்த்தியிருப்ப தாக முடிவுக்கு வரவேண்டியுள்ளது என அமெரிக்க வெளியுறவுத்துறை அமைச்சர் மைக் பொம்பியோ கூறியுள்ளார்.

பதற்றத்தை அதிகரிக்கும் நோக்கில் ஈரான் அந்தக் கப்பல் களைத் தாக்கி சேதப்படுத்திய தாகத் திரு பொம்பியோ கூறினார்.

இந்தச் சம்பவம் அனைத்துலக அமைதிக்கும் பாதுகாப்புக்கும் அச்சுறுத்தலாக விளங்குவதாக அவர் சொன்னார்.

மத்திய கிழக்கு வட்டாரத்தில் வா‌ஷிங்டன் அதன் துருப்புகளைத் தற்காத்துக்கொள்ளும் என்று கூறிய அவர், அதற்கான திட்டங்கள் எதனையும் குறிப்பிட வில்லை. கடந்த மாதம் 12ஆம் தேதி ஐக்கிய அரபு சிற்றரசு களுக்கும் சவூதி அரேபியாவிற்கும் சொந்தமான இரு எண்ணெய்க் கப்பல்கள் உள்ளிட்ட நான்கு கப்பல்கள் தாக்கப்பட்டன. இதே போல, சவூதி அரேபியாவில் இரு எண்ணெய் ஏற்று நிலையங்களில் கடந்த மே 14ஆம் தேதி வானூர்தித் தாக்குதல்கள் நடத்தப்பட்டன. இந்தத் தாக்குதல்களின் பின்ன ணியில் நேரடியாகவோ மறை முகமாகவோ ஈரான் இருப்பதாக சவூதி அரேபியாவும் அமெரிக் காவும்  குற்றம் சாட்டியிருந்தன.

இந்நிலையில், நார்வே நிறுவ னத்திற்கு சொந்தமான ‘ஃபிரண்ட் அல்டேர்’, ஜப்பான் நிறுவனத் திற்குச் சொந்தமான  ‘கொக்குவா கரேஜியஸ்’ ஆகிய எண்ணெய்க் கப்பல்கள் ஓமான் வளைகுடாவில் நேற்று முன்தினம் தாக்குதலுக்கு உள்ளாகின.  பெரும் புகைமூட்டத் துடன் பற்றி எரிந்த அந்த எண்ணெய்க் கப்பல்களில் இருந்த அனைவரும் பத்திரமாக மீட்கப் பட்டனர். இந்தத் தாக்குதல்கள் எப்படி நிகழ்த்தப்பட்டன என்பது தெளிவாகத் தெரியாத நிலையில், கடல் பரப்பில் பயன்படுத்தப்படும் கண்ணிவெடிகள் அல்லது நீர் மூழ்கிக் குண்டுகள் மூலம் நிகழ்த் தப்பட்டிருக்கலாம் என சந்தேகிக் கப்படுகிறது. 

கச்சா எண்ணெய் ஏற்றிச் செல்லும் 40 விழுக்காடு கப்பல்கள் செல்லும் நீர்வழி அருகே இந்தத் தாக்குதல் நடத்தப்பட்டதைத் தொடர்ந்து அனைத்துலக சந்தை யில் கச்சா எண்ணெய் விலை அதிகரித்துள்ளது.