பிலிப்பீன்ஸ் மீன்பிடிப் படகு மீது  மோதிய சீனக் கப்பல் 

மணிலா: தென்சீனக் கடல் பகுதியில் சென்றுகொண்டிருந்த பிலிப்பீன்ஸ் நாட்டைச் சேர்ந்த மீன்பிடிப் படகு ஒன்றின் மீது சீனக் கப்பல் வேண்டுமென்றே மோதியதாக மீன்பிடிப் படகு சிப்பந்திகள் கூறியுள்ளனர்.

சீனக் கப்பல் மோதியதால் தங்கள் படகு கடலில் மூழ்கியதாக வும் இதனால் படகில் இருந்த சிப்பந்திகள் தவிக்க நேர்ந்த தாகவும் படகு சிப்பந்தி ஒருவர் கூறினார். அதிர்ஷ்டவசமாக  தாங்கள் உயிர் பிழைத்ததாகவும் அவர் சொன்னார்.

ஆனால் மீன்பிடிப் படகு மீது சீனக் கப்பல் வேண்டுமென்றே மோதியதாகக் கூறப்படுவதை சீனா மறுத்துள்ளது. 

தென்சீனக் கடல் பகுதியில் கடந்த ஏப்ரல் 9ஆம் தேதி நடந்த அந்தச் சம்பவம்  தற்செயலாக நடந்த ஒன்று என்று சீனா கூறுகிறது. தென்சீனக் கடல் பகுதியில் பெரும் பகுதிக்கு உரிமை கொண்டாடி வரும் சீனா அடிக்கடி இதுபோன்ற அத்துமீறல் செயல்களில் ஈடுபட்டு வருவதாக பிலிப்பீன்ஸ் குற்றம் சாட்டி வருகிறது.  ஆனால் இதனை சீனா மறுத்து வருகிறது.

தென்சீனக் கடல் பகுதிக்கு சீனா, பிலிப்பீன்ஸ், மலேசியா உள்ளிட்ட பல நாடுகள் உரிமை கொண்டாடி வருகின்றன.

சீனா அதன் உரிமையை வலுப்படுத்திக்கொள்ளும் வித மாக அப்பகுதியில் ஆக்கிரமிப்பு நடவடிக்கைகளை அதிகரித்து வருகிறது.

சீனாவின் அந்தச் செயலுக்கு பிலிப்பீன்சும் அமெரிக்காவும் எதிர்ப்பு தெரிவித்து வருகின் றன. தென்சீனக் கடல் பகுதியில்  கண்காணிப்பு நடவடிக்கைகளை அமெரிக்கா தொடர்ந்து மேற் கொண்டு வருகிறது.