போரிஸ் ஜான்சனின் தகுதி குறித்து கேள்வி எழுப்பும் இதர பிரதமர் வேட்பாளர்கள்

போரிஸ் ஜான்சனின் தகுதி குறித்து கேள்வி எழுப்பும் இதர பிரதமர் வேட்பாளர்கள்

1 mins read

லண்டன்: பிரிட்டனின் அடுத்த பிரதமர் யார் என்ற கேள்விக்கு பதில் கிடைக்காத நிலையில் முன்னணி வேட்பாளரான முன்­னாள் லண்டன் நகர மேயரும் வெளியுறவு அமைச்சருமான போரிஸ் ஜான்சன் மீது மற்ற வேட்பாளர்கள் குறிவைத்துள்ளனர்.

ஐரோப்பிய ஒன்றியத்திலிருந்து இவ்வாண்டு அக்டோபர் மாதத்திற்குள் பிரிட்டன் வெளியேறுவது குறித்த போரிஸ் ஜான்சனின் வாக்குறுதி குறித்து மற்ற வேட்பாளர்கள் கேள்வி எழுப்பியுள்ளனர்.

முதல் கட்டமாக நடந்த வாக்களிப்பில் போரிஸ் ஜான்சன் மாபெரும் அளவில் முன்னணி வகித்தார். அடுத்த வாக்களிப்பிலும் அவர் பெரும்பான்மை வாக்குகளைப் பெறுவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இதற்கிடையில் பிரதமர் பதவிக்குக் குறிவைத்துள்ள மற்ற வேட்பாளர்கள் போரிஸ் ஜான்சனின் திட்டங்களும் அவரது உறுதிமொழியும் நடைமுறைக்கு சாத்தியமில்லை என்று கூறிவருகின்றனர். இதுவரை டேவிட் கேமரூன், தெரேசா மே ஆகிய இருவரை பிரதமர் பதவியிலிருந்து நகர்த்தியுள்ள பிரிட்டனின் மிகப் பெரிய பிரச்சினையே இந்த 'பிரெக்சிட்'. பிரிட்டனை ஐரோப்பிய ஒன்றியத்திலிருந்து சுமுகமாக வெளியேற்றுவதை முக்கிய அம்சமாகக் கொண்டு வேட்பாளர்கள் பிரதமர் பதவிக்கான தங்களின் திறமையை வெளிக்காட்டிவருகின்றனர். "போரிஸ் ஜான்சனுக்கும் எனக்கும் உள்ள வித்தியாசம் என்ன என்றால் 'பிரெக்சிட்' ஒப்பந்தம் நிறைவேற நான் முயற்சி செய்வேன்," என்று கூறியுள்ளார் இரண்டாவது நிலையில் போட்டியில் இருக்கும் வெளியுறவு அமைச்சர் ஜெரமி ஹன்ட்.

பிரிட்டன் மக்கள் மூன்றாண்டுகளுக்கு முன்னர் ஒன்றியத்திலிருந்து வெளியேற வாக்களித்தும் இன்னும் ஒப்பந்தம் சரிவர நிறைவேற்றப்படவில்லை.