கோலாலம்பூர்: மலேசியாவில் அமைச்சர்களைத் தொடர்புபடுத்தி வெளியிடப்பட்ட ஆபாசக் காணொளி மற்றும் ஆபாசப் படங்கள் ஆகியவற்றின் நம்பகத் தன்மை பற்றி ஆராய்வதற்கு சிறப்புக் குழு ஒன்று அமைக்கப்பட்டுள்ளதாக மலேசியப் போலிஸ் நேற்று தெரிவித்தது. அந்தக் குழுவில் இணைய ஒருங்கிணைப்புக்குழு, தடவியல், காவல்துறை ஆகிய துறைகளைச் சேர்ந்த நிபுணர்கள் சேர்க்கப்பட்டுள்ளனர்.
பொது துணைத் தலைமை காவல்துறை ஆய்வாளர் மஸ்லான் மன்சோர் கூறுகையில், "இது மின்னியல் காணொளி என்பதால் இதன் உண்மைத் தன்மை பற்றி அறிவது சவால்மிக்க பணியாகவே இருக்கும்," என்றார்.
இந்தச் சிறப்புக் குழுவில் மத்திய விசாரணைக் குழு, தடயவியல் துறை, மலேசியத் தொடர்பு மற்றும் பல்லூடகத் துறையும் இணைந்து செயலாற்றும் என்று அவர் கூறினார். இந்த விசாரணை மற்றும் நுண்ணிய சோதனைகளின் முடிவுகளுக்காக நாம் காத்திருக்க வேண்டும் என்றார்.
இந்தக் காணொளியின் உண்மைத் தன்மையை அறிவதற்கு வெளிநாட்டு உதவியை மலேசியா நாடுமா என்ற கேள்விக்குப் பதிலளிக்கையில் திரு மஸ்லான், அவ்வாறான நடவடிக்கைகள் எதுவும் மேற்கொள்ளப்படவில்லை என்றார்.
இரண்டு ஆடவர்கள் பாலியல் நடவடிக்கையில் ஈடுபடும் காணொளிக் காட்சி ஒன்றும் ஆபாசப் படங்களும் கைத்தொலைபேசி செயலிகள் மூலம் மலேசியர்களால் பரிமாறிக்கொள்ளப்பட்டன. இந்நிலையில் துணை அமைச்சரின் உதவியாளரான திரு ஹஸிஸ் அஸிஸ் என்பவர் இந்தக் காணொளிக் காட்சியில் இருக்கும் இரண்டு ஆடவர்களில் தாமும் ஒருவர் என்றும் மற்றவர் பொருளியல் விவகாரங்களுக்கான அமைச்சர் அஸ்மின் அலி என்றும் தனது ஃபேஸ்புக் பக்கத்தில் பதிவுசெய்திருந்தார்.
திரு ஹஸிஸ் அஸிஸ் கூறியிருந்ததற்கு அமைச்சர் அஸ்மின் மறுத்து கண்டனம் தெரிவித்திருந்தார். "வேண்டுமென்றே எனது பெயருக்குக் களங்கம் ஏற்படுத்தும் வகையில் செய்யப்பட்ட வேலை இது என்று தெரிவித்தார்.
இந்த வழக்கு குறித்து 21 பேரிடம் விசாரிக்கப்பட்டுள்ளதாகவும் 17 புகார்கள் பதிவுசெய்யப்பட்டுள்ளதாகவும் காவல்துறை துணைத் தலைவர் கூறியுள்ளார்.
இந்நிலையில் திரு ஹஸிக் அஸிஸ் விடுவிக்கப்பட்டதும் அவரை வாகனத்தில் அழைத்துச் சென்ற ஆடவர் அஹ்மது டேனிஸ் ஹைருடின் என்று அடையாளம் காணப்பட்டுள்ளது. அத்துடன் அவர் பிகேஆர் கட்சியைச் சேர்ந்தவர் என்பதும் தெரியவந்துள்ளது. "திரு ஹஸிக் விடுதலைக்கும் திரு அஹ்மது டேனிஸுக்கு என்ன தொடர்புள்ளது என்பதும் குறித்து பிகேஆர் கட்சிக்காரர்கள் தங்களது வாட்ஸ்அப் குழுவில் பல கேள்விகளை எழுப்பியுள்ளனர்.

