கூடுதல் வீரர்களை மத்திய கிழக்கிற்கு அனுப்புகிறது அமெரிக்கா

கூடுதல் வீரர்களை மத்திய கிழக்கிற்கு அனுப்புகிறது அமெரிக்கா

2 mins read

வா‌ஷிங்டன்: அமெரிக்காவிற்கும் ஈரானுக்கும் இடையில் பதற்றம் நீடிக்கும் வேளையில் மத்திய கிழக்கு வட்டாரத்திற்கு மேலும் 1,000 ராணுவ வீரர்களை அனுப்பவிருப்பதாக அமெரிக்கா தெரிவித்துள்ளது.

"மத்திய கிழக்கில் ஏற்பட்டுள்ள அச்சுறுத்தல்களால் மேலும் சுமார் 1,000 படைவீரர்களை அங்கு அனுப்பிவைக்க உத்தரவிட்டுள் ளேன்," என்று அமெரிக்காவின் இடைக்கால தற்காப்பு அமைச்சர் பேட்ரிக் ஷனகான் கூறினர். ஈரானுடன் மோதலை அமெரிக்கா விரும்பவில்லை என்றும் ஆனால் நமது தேசிய நலன்களைப் பாதுகாக்க இந்த வட்டாரத்தில் பணியாற்றும் அமெரிக்க ராணுவ வீரர்களின் பாதுகாப்பையும் நலனையும் உறுதிப்படுத்திக் கொள்ளவே இந்த நடவடிக்கை எடுத்திருப்பதாக திரு பேட்ரிக் கூறினார். மத்திய கிழக்கு வட்டார நிலவரத்தை அமெரிக்க ராணுவம் கண்காணிக்கும் என்றும் அதற்கு ஏற்ப அமெரிக்க வீரர்கள் அப்பகுதிக்கு அனுப்பி வைக்கப் படுவர் என்றும் அவர் சொன்னார். ஓமான் வளைகுடா பகுதியில் கடந்த வாரம் இரு எண்ணெய்க் கப்பல்கள் தாக்கப்பட்டதற்கு ஈரானே காரணம் என்று அமெரிக்கா குற்றம் சாட்டி யுள்ளது. அதற்கான ஆதாரங்களைக் காட்டும் புதிய புகைப்படங்களையும் அமெரிக்க கடற்படை வெளியிட்டுள்ளது. ஆனால் அமெரிக்காவின் இந்தக் குற்றச்சாட்டை ஈரான் மறுத் துள்ளது. கூடுதலாக அமெரிக்க வீரர்கள் மத்திய கிழக்கு வட்டாரத்தில் எப்பகுதிக்கு அனுப்பி வைக்கப்படுவர் என்ற விவரம் வெளியிடப்படவில்லை.

மத்திய கிழக்கு பகுதிக்கு மேலும் 1,500 அமெரிக்க வீரர்கள் அனுப்பப்படுவர் என்று அமெரிக்க அதிபர் டோனல்ட் டிரம்ப் சென்ற மாதம் தெரிவித்திருந்தார்.

இந்நிலையில் அமெரிக்க வெளியுறவு அமைச்சர் மைக் போம்பியோ, ஃபுளோரிடாவில் அமெரிக்க ராணுவத் தளபதியை சந்தித்துப் பேசவிருப்பதாக வா‌ஷிங்டன் தகவல்கள் கூறின.

ஈரானுடன் அனைத்துலக நாடுகள் 2015ஆம் ஆண்டு செய்துகொண்ட அணுசக்தி உடன்பாட்டிலிருந்து அமெரிக்கா சென்ற ஆண்டு விலகிக் கொண்டது.