சீனா: நிலநடுக்கத்தில் பலி எண்ணிக்கை உயர்வு

சீனா: நிலநடுக்கத்தில் பலி எண்ணிக்கை உயர்வு

2 mins read
30f12f16-40a7-449b-b316-50589aa14d90
சீச்சுவான் மாநிலத்தில் இடிபாடுகளில் சிக்கியிருந்த ஒரு பெண்ணை மீட்புக் குழுவினர் காப்பாற்றி வெளியில் கொண்டு வருகின்றனர். படம்: ராய்ட்டர்ஸ்  -

பெய்ஜிங்: சீனாவின் தென்மேற்கு மாநிலமான சீச்சுவானில் திங்கட்கிழமை இரவு ஏற்பட்ட இரண்டு நிலநடுக்கங்களில் 12 பேர் உயிரிழந்ததாகவும் 134 பேர் காயமுற்றதாகவும் சீன ஊடகங்கள் தெரிவித்துள்ளன.

நிலநடுக்கத்தின்போது இடிந்து விழுந்த கட்டடங்களின் இடிபாடு களிலிருந்து பல சடலங்களை மீட்புக் குழுவினர் வெளியில் கொண்டுவந்ததாக அதிகாரி ஒருவர் கூறினார்.

வழக்கமாக அதிக நிலநடுக்கம் ஏற்படும் சீன மாநிலமான சீச்சுவானில் 30 நிமிட இடைவெளியில் இரண்டு நில நடுக்கங்கள் ஏற்பட்டன. கட்டட இடிபாடுகளிலிருந்து மீட்புக் குழுவினர் பலரை உயிருடன் காப்பாற்றியுள்ளனர்.

இடிபாடுகளில் சிக்கியிருந்த ஒருவரை மீட்புக் குழுவினர் காப்பாற்றி வெளியில் கொண்டு வருவதை கண்காணிப்பு கேமரா புகைப்படங்கள் காட்டின.

மின் கம்பம் ஒன்று சாய்ந்ததால் ஒரு கட்டடத்தின் மேற்கூரை சேதமடைந்ததாகவும் கூறப்பட்டது. நிலநடுக்கத்தால் அருகில் உள்ள செங்டு, சோங்சிங் பகுதிகளிலும் பல நில அதிர்வுகள் உணரப்பட்டதாக சீன அதிகாரிகள் கூறினர். முதலில் 5.9 ரிக்டர் அளவு நிலநடுக்கம் உலுக்கியதாகவும் அதனைத் தொடர்ந்து 5.2 ரிக்டர் அளவு நிலநடுக்கம் ஏற்பட்டதாகவும் அமெரிக்க புவியியல் ஆய்வு மையம் தெரிவித்தது.

அவ்விரு நிலநடுக்கங்களும் கடலுக்கு அடியில் 10 கிலோ மீட்டர் ஆழத்தில் உருவானதாக ஆய்வு மையம் குறிப்பிட்டது. நிலநடுக்கத்தின்போது சீச்சுவான் மாநிலத்தில் பல வீடுகள் மற்றும் கட்டடங்கள் இடிந்து விழுந்த தால் சுமார் 4,000 பேர் பாதுகாப்பு கருதி வேறு இடங்களுக்கு அனுப்பப்பட்டதாக அரசாங்க உயர் அதிகாரி ஒருவர் கூறினார்.

நிலநடுக்கத்தால் முக்கிய இரு நகரங்களை இணைக்கும் நெடுஞ் சாலைகளில் வெடிப்பு காணப்பட்ட தாகவும் இதனால் போக்குவரத்து பெரிதும் பாதிக்கப்பட்டதாகவும் சின்ஹுவா செய்தி நிறுவனம் தெரிவித்தது.

நிலநடுக்கம் ஏற்பட்டதும் மக்கள் பதற்றத்துடன் வீடுகளைவிட்டு வீதிக்கு ஓடி வருவதைக் காட்டும் புகைப்படங்களும் சமூக ஊடகங்களில் வெளிவந்ததாக செய்தி நிறுவனம் குறிப்பிட்டது.