பல ஆண்டுகாலம் அயராது ஆராய்ந்துவரும் உலக வானிலை ஆய்வு அமைப்பு, அண்மையில் பதிவான இரு வெப்பநிலைகளைப் பூமியின் ஆகச் சூடான வெப்பநிலைகளாக ஏற்றுக்கொண்டிருப்பதாகச் செவ்வாய்க்கிழமை (ஜூன் 18) அறிவித்தது.
அவ்விரு வெப்பநிலைகளில் ஒன்று மத்தியக் கிழக்கிலும், மற்றொன்று தெற்காசியாவிலும் பதிவாகின.
குவைத்தின் மிட்ரிபா நகரில் 2016ஆம் ஆண்டு ஜூலை 21ஆம் தேதி 53.9 டிகிரி செல்சியஸ் (0.1 டிகிரி கூடுதலாக அல்லது குறைவாக இருக்கலாம்) பதிவானது.
பாகிஸ்தானின் டர்பட் வட்டாரத்தில் 2017ஆம் ஆண்டு மே 28ஆம் தேதி 53.7 டிகிரி செல்சியஸ் (0.4 டிகிரி கூடுதலாக அல்லது குறைவாக இருக்கலாம்) வெப்பநிலை பதிவு செய்யப்பட்டது.
"குவைத்தின் மிட்ரிபா நகரின் வெப்பநிலை ஆசியாவில் இதுவரை பதிவாகியுள்ள ஆகச் சூடான வெப்பநிலையாக இப்போது ஏற்கப்பட்டுள்ளது," என்று வானிலை அமைப்பின் அறிக்கை குறிப்பிட்டது.
"இவ்விரு வெப்பநிலைகளும் இதுவரை பதிவாகியுள்ள ஆகச் சூடான வெப்பநிலைகளில் மூன்றாவது, நான்காவது இடத்தில் உள்ளன," என்றும் அறிக்கை தெரிவித்தது.
கடந்த 76 ஆண்டுகளில் பதிவான ஆகச் சூடான வெப்பநிலைகள் இவை.

