மலேசிய ஆபாச காணொளி விவகாரம்: போலிசின் விசாரணை வளையத்தில் மேலும் பலர்

மலேசிய ஆபாச காணொளி விவகாரம்: போலிசின் விசாரணை வளையத்தில் மேலும் பலர்

1 mins read

மலேசிய அரசியலில் சூறாவளியைக் கிளப்பி வரும் பாலியல் காணொளி விவகாரத்தில் இன்னும் முடிவு காணப்படவில்லை என்றும் விசாரணை தொடர்வதாகவும் மலேசிய தலைமை போலிஸ் அதிகாரி மஸ்லான் மன்சூர் நேற்று தெரிவித்தார்.

தேவைப்பட்டால் விசாரணைக்கு மேலும் பலர் அழைக்கப்படுவார்கள் என்றும் காணொளியின் உண்மைத்தன்மையைக் கண்டறியும் முயற்சி தொடர்ந்து மேற்கொள்ளப்பட்டு வருகிறது என்றும் அவர் கூறினார்.

"இந்த வழக்கின் விசாரணைக்கு உதவும்பொருட்டு எட்டுப்

பேரிடம் ஏற்கெனவே வாக்குமூலம் பெறப்பட்டுள்ளது," என்று அவர் கூறியதாக ஸ்டார் இணையச் செய்தி தெரிவித்துள்ளது.

அதிகாரிகள் விரிவான அளவில் விசாரணை மேற்கொண்டு வருவதாகவும் அது எப்போது முடிவடையும் என்பதற்கான காலக்கெடு எதுவும் இல்லை என்றும் திரு மன்சூர் குறிப்பிட்டார்.

இதற்கிடையே, அமைச்சர் அஸ்மின் அலியைப் பதவி விலக அல்லது விடுப்பில் செல்லக் கோருவதைக் காட்டிலும் போலிஸ் விசாரணையை அனுமதிப்பதே சிறந்தது என்று பிகேஆர் கட்சி துணைத் தலைவர் ஸுரைடா கமருதீன் (படம்) கூறியுள்ளார்.

"போலிஸ் விசாரணையின் முடிவுக்காக ஏன் காத்திருக்கக் கூடாது? இவ்விவகாரம் ஒரு சூழ்ச்சி என்பதை நானறிவேன்," என்று நேற்று செய்தியாளர்களிடம் அவர் கூறினார்.

ஓரினச்சேர்க்கையில் ஈடுபடும் காணொளியில் இருப்பது பொருளியல் விவகார அமைச்சர் அ-ஸ்மின் அலியும் தாமும் என்று சந்துபோங் பிகேஆர் இளையர் பிரிவு தலைவர் ஹஸிக் அப்துல்லா கூறியதைத் தொடர்ந்து இவ்விவகாரம் பெரிதாகி வருகிறது.