பாலியல் காணொளி சர்ச்சையை எதிர்நோக்கும் மலேசிய பொருளியல் விவகார அமைச்சர் அஸ்மின் அலி தொடர்ந்து பதவியில் இருக்கலாம் என்று அந்நாட்டின் பிரதமர் மகாதீர் முகம்மது தெரிவித்திருக்கிறார். காணொளி குறித்து நடத்தப்பட்டு வரும் போலிஸ் விசாரணைக்குத் திரு அஸ்மின் இடையூறு செய்யவில்லை என்றும், அவர் செய்ததாகக் கூறப்படுவது குற்றச்செயல் அல்ல என்றும் டாக்டர் மகாதீர் கூறினார். இது ஓர் அரசியல் விளையாட்டு என்று வர்ணித்த டாக்டர் மகாதீர், திரு அஸ்மினை அவமானப்படுத்துவதே இதன் நோக்கம் எனக் கூறினார்.
குற்றச்செயல் தொடர்பான விசாரணை நடந்தால் திரு அஸ்மினை விடுப்பு எடுக்கச் சொல்லலாம். அன்றி, அவர் அவ்வாறு செய்வதற்கான அவசியமே இல்லை என்று டாக்டர் மகாதீர் சொன்னார். ஓரினப் பாலியல் நடவடிக்கைகளைக் காட்டும் இரண்டு காணொளிகளில் திரு அஸ்மின் இருப்பதாகக் குற்றச்சாட்டுகள் சுழல்கின்றன. அதனைத் தொடர்ந்து, அந்தக் காணொளிகளில் இருந்த மற்ற இரண்டு ஆடவர்களில் ஒருவர் தாமே என்று பக்கத்தான் ராக்யாட் கட்சியின் இளம் தலைவர்களில் ஒருவரான ஹசிக் அப்துல்லா அப்துல் அஸிஸ் தெரிவித்தார். அதனைத் தொடர்ந்து திரு ஹசிக் தமது அரசியல் பொறுப்புகளிலிருந்து நீக்கப்பட்டார்.
பிரதமர் மகாதீரின் நிலைப்பாட்டை ஆமோதிப்பதாக பக்கத்தான் ராக்யாட் கட்சியின் தலைவரும் மலேசியாவின் முன்னாள் துணைப்பிரதமருமான அன்வார் இப்ராஹிம் தெரிவித்தார். டாக்டர் மகாதீரின் தாய்லாந்து பயணத்திற்கு முன்னதாகத் தாங்கள் இருவரும் சந்தித்ததாகத் திரு அன்வார் நேற்று கூறினார். "இந்தச் சாக்கடை அரசியல் கலாசாரத்தை எனது கட்சி நிராகரிக்கிறது. திரு அஸ்மினுக்கும் அவரது குடும்பத்தாருக்கும் எனது அனுதாபங்கள்," என்று திரு அன்வார், நேற்று வெளியிட்ட தமது ஃபேஸ்புக் பதிவில் குறிப்பிட்டார்.

