ஹாங்காங்கில் குற்றம் சாட்டப்பட்ட வர்களை விசாரணைக்காக சீனா வுக்கு அனுப்ப வழிவகை செய்யும் சர்ச்சைக்குரிய மசோதாவை நேற்று மாலைக்குள் அரசு முழுமை யாக ரத்து செய்ய வேண்டும் எனப் போராட்டக்காரர்கள் காலக் கெடு விதித்தனர்.
அந்தக் கோரிக்கை ஏற்கப்படா விட்டால் ஹாங்காங்கில் மீண்டும் முற்றுகைப் போராட்டம் தொடரும் என்று மாணவ அமைப்பினர் எச்ச ரித்திருந்தனர்.
இந்நிலையில், குறித்த காலக் கெடுவிற்குள் தங்களது கோரிக் கைகள் நிறைவேற்றப்படா ததால் போராட்டங்களைத் தொடரப் போவதாக அவர்கள் மிரட்டி உள்ளனர். போராட்டத்திற்காக மக்களைத் திரட்டும் பணியில் மாணவ அமைப்பினர் நேற்றிரவு ஈடுபட்டனர்.
இந்நிலையில் இன்று ஹாங் காங்கில் மீண்டும் பெரிய அளவில் போராட்டம் நடைபெறக்கூடும் என்று அஞ்சப்படுகிறது.
சர்ச்சைக்குரிய இந்தச் சட்டத்தின் மூலம் சீன அரசுக்கு எதிராகக் குரல் கொடுப்போர் மீது தேச விரோத சட்டத்தின் கீழ் சீனா நடவடிக்கை எடுக்க வாய்ப்பு உள்ளதாக ஹாங்காங் மக்கள் கருதுகின்றனர்.
அதைத் தொடர்ந்து இம்மாதம் 9ஆம் தேதி இந்த மசோதாவை ரத்து செய்ய வலியுறுத்தி நூறா யிரக்கணக்கான மக்கள் ஒன்று திரண்டு அமைதி பேரணி நடத் தினர். முப்பது ஆண்டுகளுக்குப் பின் ஹாங்காங்கில் நடைபெற்ற மிகப்பெரிய போராட்டம் இது.
ஹாங்காங் போராட்டத்திற்கு சில உலக நாடுகளும் ஆதரவு தெரிவித்திருந்த நிலையில், ஹாங்காங் அரசுக்கு அழுத்தம் அதிகரித்துள்ளது.
இந்த விவகாரம் குறித்து ஹாங்காங் மக்களிடம் இரண்டு முறை பொது மன்னிப்புக் கேட்ட ஹாங்காங் தலைமை நிர்வாகி கேரி லாம், இந்த மசோதாவைத் தற்காலிகமாக ஒத்திவைப்பதாக அறிவித்தார்.
இருப்பினும், அவரது செயல் பாட்டில் திருப்தி அடையாத போராட்டக்காரர்கள், மசோதாவை முழுமையாகக் கைவிட வேண்டும் என்று நெருக்குதல் அளித்து வந்துள்ளனர்.
அத்துடன், இம்மாதம் 12ஆம் தேதி வெடித்த கலவரத்தில் கைது செய்யப்பட்டோர் மீது சுமத்தப்பட்ட குற்றச்சாட்டுகளைக் கைவிட்டு அவர்களை விடுதலை செய்ய போராட்டக்காரர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

