துபாய்: தனது ஆகாய வெளிக்குள் அமெரிக்கா அத்துமீறி ஊடுருவியதாக ஈரான் கண்டனம் தெரிவித்துள்ளது. அமெரிக்கா ஆளில்லா விமானம் ஒன்றை தங்கள் ஆகாய எல்லையில் பறக்கவிட்டதாகவும் அதற்குத் தக்க பதிலடி கொடுக்கப்படும் என்றும் ஈரான் அமெரிக்காவை எச்சரித்துள்ளதாக அந்நாட்டுத் தொலைக்காட்சி ஒன்று தெரிவித்தது. ஈரானின் தெற்குப் பகுதியில் பறந்த அந்த ஆளில்லா விமானத்தை ஈரானின் புரட்சிக் காவல்படை சுட்டு வீழ்த்தியதாக ஈரான் கூறியது. அமெரிக்காவின் விமானம் சுட்டு வீழ்த்தப்பட்டதைத் தொடர்ந்து இந்த இரு நாடுகளுக்கிடையே போர் மூளும் என்று அஞ்சப்படுகிறது.
ஈரானின் எல்லைப்பகுதிகளில் நடக்கும் இதுபோன்ற அத்துமீறல்களை ஈரான் ஒருபோதும் சகித்துக்கொள்ளாது. இதுபோன்ற சட்டவிரோத நடவடிக்கைகளுக்கு ஈரான் தக்க பதிலடி கொடுக்கும் என்று அந்நாட்டு அமைச்சின் பேச்சாளர் அப்பாஸ் மௌசவி தெரிவித்தார். ஈரானிய பாதுகாப்புப் படைக்குச் சொந்தமான இணையத் தளம் ஒன்று, அமெரிக்காவின் உளவு விமானம் ஈரானின் ஹோர்முஸ் பகுதியில் சுட்டு வீழ்த்தப்பட்டதாகத் தெரிவித்தது. ஆனால் அமெரிக்காவோ இதனை மறுத்துள்ளது.
அமெரிக்கக் கடற்படைக்குச் சொந்தமான 'எம்கியூ-4சி ட்ரிடோன்' என்னும் அந்த விமானம் ஹோர்முஸ் கடற்பகுதிக்கு மேலே அனைத்துலக ஆகாய வெளிப் பகுதியில் பறந்துகொண்டிருக்கும்போது சுட்டு வீழ்த்தப்பட்டது என்று அமெரிக்க அதிகாரிகள் தெரிவித்தனர்.ஆளில்லா விமானம் சுட்டு வீழ்த்தப்பட்டது என்பது ஈரானின் சக்திவாய்ந்த எல்லைக் காவல் படையின் எச்சரிக்கை.
இது போன்ற எங்கள் நாட்டின் எல்லைக்குள் அத்துமீறல் நடவடிக்கை மேற்கொண்டால் இதுபோன்று தக்க பதிலளிக்கப்படும் என்று ஈரான் தெரிவித்தது.

