பெய்ஜிங்: சீன அதிபர் ஸி ஜின்பிங் நேற்று அதிகாரபூர்வ பயணம் மேற்கொண்டு வடகொரியாவின் பியோங்யாங்குக்குச் சென்று சேர்ந்தார். அவருடன் சீனாவின் உயர்மட்ட அதிகாரிகளும் சென்றுள்ளதாக சீன அரசு ஊடகம் தெரிவித்தது. அமெரிக்காவுக்கும் சீனாவுக்கும் நிலவி வரும் கசப்பான பொருளியல் விவகாரம் குறித்து அடுத்த வாரம் நடக்கவிருக்கும் ஜி20 மாநாட்டில் அமெரிக்க அதிபர் டோனல்ட் டிரம்ப்புடன் சீன அதிபர் ஸி பேச்சுவார்த்தை நடத்தவுள்ளார். இந்நிலையில் வடகொரிய அதிபர் கிம் ஜோங் உன்னுடனான சந்திப்பு நிகழ்ந்துள்ளது குறிப்பிடத்தக்கது.
திரு ஸி, நேற்று வடகொரிய நேரப்படி காலை 11.40 மணிக்கு பியோங்யாங் சென்று சேர்ந்தார் என சீனா தெரிவித்தது.வடகொரியத் தலைவர் கிம் ஜோங் உன் தனது மனைவி ரி சொல் ஜுவுடன் பியாங்யாங் விமான நிலையத்தில் சீனத் தலைவரை வரவேற்றார் என்று சீன அரசாங்கத் தொலைக்காட்சி தெரிவித்தது.திரு கிம்மின் சகோதரியான குமாரி கிம் யோ ஜோங் மற்றும் அண்மையில் அமெரிக்காவுடன் நடந்த அணுவாயுதப் பேச்சில் கலந்துகொண்ட வடகொரிய உயர்நிலை அதிகாரிகளுடன் வடகொரியத் தலைவர் கிம், சீனத் தலைவரை வரவேற்றார்.திரு ஸி, பியோங்யாங் விமான நிலையத்தில் இருந்து கும்சுசன் அரண்மனைக்கு ஒரு காரில் அழைத்துச்செல்லப்பட்டார். திரு ஸியின் வாகனம் சென்ற சாலையின் இரு புறங்களிலும் ஏராளமானோர் வரிசையாக நின்று மகிழ்ச்சி பொங்க அவரை வரவேற்றனர். கடந்த 14 ஆண்டுகளில் சீனத் தலைவர் ஒருவர் வடகொரியாவுக்குச் சென்றுள்ளது இதுவே முதல் முறை. ஆனால் திரு கிம் சீனாவுக்கு கடந்த ஆண்டில் மட்டும் நான்கு முறை சென்றுள்ளார். வடகொரியா மீது விதிக்கப்பட்டுள்ள வர்த்தகத் தடையைத் தளர்த்துவதற்காக சீனாவிடம் ஆதரவு கோரி அந்நாட்டுக்கு அவர் பயணம் மேற்கொண்டார்.
°திரு ஸியுடன் அவரது மனைவி பெங் லியுவான் மற்றும் வெளியுறவு அமைச்சர் வாங் யி சென்றுள்ளதாக சீன அரசாங்கத் தொலைக்காட்சி ஒன்று தெரிவித்தது. சீன அதிபர் ஸியின் வருகையை முன்னிட்டு பியோங்யாங் நகரத்தின் முக்கிய பகுதிகளில் சீன நாட்டுக் கொடி பறக்கவிடப்பட்டிருந்தது. வடகொரியாவின் அண்டை நாடான சீனாவே வடகொரியாவின் முக்கிய நட்பு நாடாகும். அணுவாயுதக் களைவை மேற்கொள்ள வேண்டும் என வடகொரியாவை அமெரிக்கா நெருக்கி வரும் வேளையில் சீனத் தலைவரின் இந்த வருகையால் அந்த வட்டாரத்தில் பதற்றம் மேலும் அதிகரித்திருப்பதாகக் கூறப்படுகிறது. வடகொரியாவிடம் சீனா கொண்டுள்ள அக்கறையையும் ஆதிக்கத்தையும் அமெரிக்காவுக்கு சுட்டிக்காட்டவும் சீனத் தலைவரின் இந்தப் பயணம் இடம்பெற்றிருக்கலாம் என்று அரசதந்திரிகள் கூறுகின்றனர்.
இப்பயணம் குறித்துச் சீன அதிபர் ஸி ஜின்பிங் கூறும்போது, வடகொரியாவுடன் பேச்சுவார்த்தை மற்றும் ஒருங்கிணைப்பை வலுப்படுத்துவதன் மூலம் கொரிய தீபகற்பத்தில் அமைதி, நிலைத்தன்மை, வளர்ச்சிக்கு சீனா தீவிரமான பங்களிப்பை அளிக்க முடியும்," என்றார்.அமெரிக்க அதிபர் டோனல்ட் டிரம்ப்-வடகொரிய அதிபர் கிம் ஜோங் உன் இடையே, கடந்த பிப்ரவரி மாதம் வியட்னாமின் ஹனோய் நகரில் பேச்சுவார்த்தை நடைபெற்றது. இந்தப் பேச்சுவார்த்தைத் தோல்வியில் முடிந்ததையடுத்து வடகொரியா மீண்டும் ஏவுகணைச் சோதனையில் ஈடுபட்டு வருகிறது.

