பாசிர் கூடாங்: பாசிர் கூடாங் வட்டாரத்தில் உள்ள சுங்கை கிம் கிம் ஆற்றில் ஏற்பட்ட காற்று மாசு காரணமாக வியாழக்கிழமை 15 பேர் பாதிக்கப்பட்டதைத் தொடர்ந்து அப்படியொரு சம்பவம் இனி நடக்காது என்று ஜோகூர் அரசாங்கம் தெரிவித் துள்ளது.
பாதிக்கப்பட்ட 15 பேரில் 13 பேர் மாணவர்கள். வாந்தி மற்றும் மூச்சுத் திணறலால் அவர்கள் பாதிக்கப்பட்டனர். அந்த சம்பவத்தைத் தொடர்ந்து பாசிர் கூடாங் உள்ளரங்கில் நடவடிக்கை நிலையம் ஒன்றை அதிகாரிகள் திறந்திருப்பதாக ஜோகூர் மாநில சுகாதார, கலாசார, மரபுடைமைக் குழுவின் தலைவர் முகம்மது கூஸான் அபு பக்கர் கூறினார்.
சுங்கை கிம் கிம் ஆற்றில் சட்டவிரோதமாக இதுவரை யாரும் குப்பைகளை கொட்ட வில்லை என்பது கண்டறியப் பட்டுள்ளதாக சுற்றுப்புற அமைச்சு தெரிவித்துள்ளது.
பாதிக்கப்பட்ட பகுதியைச் சுற்றிலும் 2 கிலோ மீட்டர் தொலைவு வரையில் காற்றின் தரத்தை ஒரு குழு சோதனை செய்ய இருப்பதாகவும் தீ அணைப்பு, மீட்பு இலாகா, மற்றும் சுற்றுப்புற அமைச்சு அதிகாரிகள் தலைமையில் அந்த சோதனை மேற்கொள்ளப்பட இருப்பதாகவும் உயர் அதிகாரி ஒருவர் கூறினார்.
கடந்த மார்ச் மாதம் சுங்கை கிம் கிம் ஆற்றில் ஏற்பட்ட நச்சு தூய்மைக்கேட்டால் சுமார் 4,000 பேர் வாந்தி மற்றும் மூச்சுத் திணறலால் பாதிக்கப்பட்டனர்.
ஆகக் கடைசியாக பாதிக்கப் பட்ட 15 பேரில் 6 பேர் மட்டும் மருத்துவ சோதனைக்காக சுல்தான் இஸ்மாயில் மருத்துவ மனையில் சேர்க்கப்பட்டுள்ளதாக வும் அவர்களின் உடல்நிலை சீராக இருப்பதாகவும் திரு கூஸான் கூறினார்.
பாதிக்கப்பட்ட மாணவர்கள் பாசிர் கூடாங் பகுதியில் உள்ள இரு பள்ளிகளைச் சேர்ந்தவர்கள்.
பாசிர் கூடாங் நிலவரத்தை அதிகாரிகள் கண்காணித்து வருவதால் மக்கள் பீதி அடையத் தேவையில்லை என்று அவர் கூறினார்.

