சோல்: இருதரப்பு உறவை மேலும் வலுப்படுத்தவும் பல்வேறு துறை களில் ஒத்துழைக்கவும் வட கொரியத் தலைவர் கிம் ஜோங் உன்னும் சீன அதிபர் ஸி ஜின்பிங்கும் இணங்கியிருப்பதாக அதிகாரபூர்வ வடகொரிய செய்தி நிறுவனம் தெரிவித்துள்ளது.
சீன அதிபர் ஸியின் வருகை இரு நாட்டு உறவையும் மாறாத நட்பையும் மேலும் வலுப்படுத்திக் கொள்வதற்கான முக்கிய வாய்ப்பு என்று திரு கிம் கூறினார்.
சீனாவை அதிகம் நேசிப்பதாகக் கூறிய திரு கிம் வடகொரிய வடகொரியாவுக்கும் சீனாவுக்கும் இடையிலான உறவு யாராலும் பிரிக்க முடியாத ஒன்று என்று குறிப்பிட்டார். இரண்டு நாள் அதிகாரத்துவ பயணமாக வியாழக்கிழமை வடகொரியத் தலைநகர் பியோங்யாங்கிற்கு சென்று சேர்ந்த சீன அதிபர் ஸியை திரு கிம் வரவேற்றதுடன் இருவரும் இரு முறை சந்தித்துப் பேசினர்.
கடந்த 14 ஆண்டுகளில் சீன அதிபர் ஒருவர் வடகொரியா சென்றிருப்பது இதுவே முதல் தடவை. அத்துடன் 2012ஆம் ஆண்டு அதிபராக தேர்ந்தெடுக்கப் பட்ட ஸி ஜின்பிங் வடகொரியா சென்றிருப்பதும் இதுவே முதல் தடவை. வடகொரியாவும் சீனாவும் நட்பு நாடுகள் என்ற போதிலும் வடகொரியாவின் அணுவாயுத நடவடிக்கைகளால் சீனா அதிருப்தி அடைந்திருந்தது.
இதனால் வடகொரியா மீது பொருளியல் தடைகள் விதிக்கப் படுவதற்கும் சீனா ஆதரவு தெரிவித்திருந்தது.
இந்நிலையில் திரு கிம் சீனாவுக்கு நான்கு முறை பயணம் மேற்கொண்டு சீன அதிபரை சந்தித்துப் பேசியிருக் கிறார். கிம்மின் சீன வருகையைத் தொடர்ந்து சீன அதிபர் வடகொரியா சென்றுள்ளார்.
ஜப்பானில் நடைபெறவுள்ள ஜி 20 மாநாட்டிற்கு முன்னதாக சீன அதிபர் ஸி, திரு கிம்மை சந்தித்துப் பேசியுள்ளார்.
ஜி20 மாநாட்டில் திரு ஸியும் அமெரிக்க அதிபர் டோனல்ட் டிரம்ப்பும் சந்தித்துப் பேசவுள்ள நிலையில் திரு கிம்மை சீன அதிபர் ஸி சந்தித்து பேசியுள்ளார்.
வடகொரியாவின் முக்கிய வர்த்தக கூட்டாளியாக விளங்கும் சீனா வடகொரியாவுக்கு மிகவும் முக்கியத்துவம் வாய்ந்த நாடாக கருதப்படுகிறது. அமெரிக்காவின் நெருக்குதலுக்கு உள்ளாகியிருக் கும் வடகொரியாவுக்கு சீனா அதன் ஆதரவை தெரிவிப்பது திரு ஸியின் இந்த வருகையின் நோக்கம் என்று கூறப்படுகிறது.
கொரிய தீபகற்பத்தில் அமைதியும் நிலைத்தன்மையும் நிலவ அமைதிப் பேச்சு வார்த்தையை தொடர்வதற்கான அவசியம் குறித்து திரு ஸியும் கிம்கும் பேச்சு நடத்தியதாக சின்ஹுவா செய்தி நிறுவனம் குறிப்பிட்டது.
பியோங்யாங் விமான நிலையத்தில் சீன அதிபர் ஸி ஜின்பிங்கை வடகொரியத் தலைவர் கிம் வரவேற்றார். படம்: ராய்ட்டர்ஸ்

