இலங்கை பிரதமர் ரணில்: பயங்கரவாத இயக்க உறுப்பினர்கள் அனைவரும் கைது

இலங்கை பிரதமர் ரணில்: பயங்கரவாத இயக்க உறுப்பினர்கள் அனைவரும் கைது

2 mins read
7a08de81-6379-40e6-986f-6a1b65d23275
-

இலங்கையில் கடந்த ஏப்ரல் மாதம் 21ஆம் தேதி ஈஸ்டர் ஞாயிறு நாளன்று நடத்தப்பட்ட தொடர் பயங்கரவாதத் தாக்குதலுக்குக் காரணமான தேசிய தவ்ஹீத் ஜமாஅத் என்ற உள்ளூர் அமைப்பின் உறுப்பினர்கள் அனைவரும் கைது செய்யப்பட்டுவிட்டதாக அந்நாட்டுப் பிரதமர் ரணில் விக்ரம சிங்கே தெரிவித்துள்ளார்.மூன்று தேவாலயங்களிலும் மூன்று ஹோட்டல்களிலும் தற்கொலைப்படையினர் ஒன்பது பேர் தாக்குதல் தொடுத்ததில் 258 பேர் கொல்லப்பட்டனர்; ஐந்நூற்றுக்கும் மேற்பட்டோர் காயமுற்றனர்.

இந்தத் தாக்குதலுக்கு தேசிய தவ்ஹீத் ஜமாஅத் அமைப்பே காரணம் என இலங்கை அரசு குற்றம் சுமத்தியது. இதற்கிடையே, அந்தத் தாக்குதல்களில் தனக்கும் பங்கு இருப்பதாக ஐஎஸ்ஐஎஸ் அமைப்பும் அறிவித்தது. இந்நிலையில், "ஸஹ்ரான் ஹா‌ஷிம் தலைமையிலான அந்தப் பயங்கரவாதக் குழுவைச் சேர்ந்த எல்லாரும் கைது செய்யப்பட்டுவிட்டதாக போலிசிடம் இருந்து எனக்கு அறிக்கை கிடைத்துள்ளது," என்று ரணில் கூறியுள்ளார். தாக்குதலின்போது ஸஹ்ரான் ஹா‌ஷிம் மாண்டுபோனான். இந்தியர்கள் பதினொருவர் உட்பட வெளிநாட்டவர்கள் 44 பேரும் அத்தாக்குதல்களில் மாண்டனர். இதற்கிடையே, தேசிய தவ்ஹீத் ஜமாஅத் அமைப்பின் மிரட்டல் முற்றிலும் அழித்தொழிக்கப்பட்டு விட்டதாக ரணில் தெரிவித்தார்.

"அந்த அமைப்புடன் தொடர்பு வைத்திருந்தவர்களிடமும் அதன் சமய போதனை வகுப்புகளில் பங்கேற்றவர்களிடமும் விசாரணை நடத்தப்பட்டது," என்றார் ரணில். பயங்கரவாதத் தாக்குதல்கள் அரங்கேறலாம் என உளவுத்தகவல் கிடைத்தும் உரிய பாதுகாப்பு நடவடிக்கை எடுக்காமல் மெத்தனமாக இருந்துவிட்டதாக ரணில் தலைமையிலான அரசாங்கம் பெரிதும் விமர்சிக்கப்பட்டது.

முன்னதாக, இலங்கையில் மேலும் ஒரு மாத காலத்திற்கு அவசரநிலை நீட்டிக்கப்படுவதாக அதிபர் மைத்திரிபால சிறிசேன நேற்று முன்தினம் அறிவித்தார்.