பங்ளாதே‌ஷில் கால்வாய்க்குள் கவிழ்ந்த ரயில்

பங்ளாதே‌ஷில் கால்வாய்க்குள் கவிழ்ந்த ரயில்

1 mins read
d6719ba8-6d9f-4742-8a23-60f9d519501c
பாலம் உடைந்ததால் கவிழ்ந்த ரயில் பெட்டிகள். படம்: ராய்ட்டர்ஸ் -

பங்ளாதே‌ஷில் விரைவு ரயில் ஒன்று ஓடிக்கொண்டிருந்தபோது பாலம் திடீரென்று இடிந்ததில் கவிழ்ந்தது. அதில் பயணம் செய்த ஐவர் உயிரிழந்தனர்.

நூற்றுக்கும் மேற்பட்டோர் காயங்களுடன் மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டு உள்ளனர். அவர்களில் உயிருக்குப் போராடும் 21 பேர் அருகிலுள்ள சில்ஹெட் நகர் மருத்துவமனைக்கு விரைந்து கொண்டு செல்லப்பட்டனர்.

தலைநகர் டாக்காவிலிருந்து சுமார் 300 கி.மீ. தொலைவிலுள்ள கலாவ்ரா என்னுமிடத்தில் நேற்றுக் காலை விபத்து நிகழ்ந்தது. திடீரென்று பாலம் இடிந்ததால் ரயிலின் ஐந்து பெட்டிகள் தடம் புரண்டு கால்வாயில் விழுந்தன.

சம்பவத்தைக் கேள்விப்பட்டு விரைந்து வந்த தீயணைப்பு மற்றும் போலிஸ் படையினருடன் உள்ளூர் மக்களும் மீட்புப் பணிகளில் ஈடுபட்டனர்.

சேதமடைந்த ரயில் பெட்டிகளுக்குள் சிக்கிக்கொண்டவர்களை அவர்கள் ஒன்றுசேர்ந்து மீட்டு வெளியில் கொண்டு வந்ததாக ர‌ஷிதுல் ஹசன் என்னும் போலிஸ் அதிகாரி ஏஎஃப்பி செய்தி நிறுவனத்திடம் கூறினார்.

விபத்து காரணமாக டாக்காவிலிருந்து வடகிழக்குப் பகுதிகளுக்குச் செல்ல வேண்டிய ரயில் சேவைகள் நிறுத்திவைக்கப்பட்டதாகவும் அவர் கூறினார்.