கம்போடியாவில் இடிந்து விழுந்த கட்டடம்: இருவர் உயிருடன் மீட்பு

கம்போடியாவில் இடிந்து விழுந்த கட்டடம்: இருவர் உயிருடன் மீட்பு

1 mins read
f5bb16d3-1a36-49bb-94ce-a62d0a4bace5
இடிபாடுகளுக்கு அடியில் சிக்கித் தவித்த ஒருவரை உயிருடன் மீட்கும் மீட்புப் பணியாளர்கள். படம்: ஏஎஃப்பி -

சிகானோக்வில்: கம்போடியாவின் கடற் கரை உல்லாசத்தளத்தில் கட்டடம் இடிந்து விழுந்த சம்பவத்தில் மாண்டோர் எண்ணிக்கை உயர்ந்துள்ளது.

இதுவரை குறைந்தது 28 பேர் இறந்துவிட்டதாக கம்போடிய அதிகாரிகள் தெரிவித்தனர்.

இடிபாடுகளுக்கு அடியிலிருந்து மேலும் மூன்று சடலங்கள் நேற்று வெளியே எடுக்கப்பட்டன.

கட்டுமானப் பணிகள் நிறைவுபெறாத அந்தக் கட்டடம் கடந்த சனிக்கிழமை இடிந்து விழுந்தது.

அப்போது அந்த ஏழு மாடி கட்டடத்தில் கட்டுமான ஊழியர்கள் பலர் தூங்கிக்கொண்டிருந்தனர்.

இடிந்து விழுந்த கட்டடம் சீன நிறுவனத்துக்குச் சொந்தமானது.

சம்பவம் நிகழ்ந்து இரண்டு நாட்கள் ஆகிவிட்ட நிலையில் இடிபாடுகளுக்கு அடியில் சிக்கியிருப்போரை இனி உயிருடன் மீட்பது சிரமம் என்றிருந்த போது நேற்று இருவர் உயிருடன் மீட்கப்பட்டனர்.

கம்போடியாவின் பிரதமர் ஹுன் சென் சம்பவ இடத்துக்கு நேற்று காலை சென்றார்.

அந்த இருவர் உயிருடன் மீட்கப்படுவதை அவர் நேரில் பார்த்தார். மீட்கப்பட்ட இருவரை அதிகாரிகள் உடனடியாக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

சம்பவம் நிகழ்ந்த கடற்கரை உல்லாசத்தளத்தில் உள்ள அனைத்து உயர் கட்டடங்களின் பாதுகாப்பு அம்சங்களைச் சோதனையிடும்படி திரு ஹுன் சென் அதிகாரிகளுக்கு உத்தர விட்டுள்ளார்.

இதற்கிடையே, சம்பவம் நிகழ்ந்த மாநிலத்தின் ஆளுநர் நேற்று பதவி விலகினார். கம்போடிய நில உரிமையாளர் ஒருவரையும் சீன நாட்டவர்கள் மூவரையும் கம்போடிய போலிசார் தடுத்து வைத்து விசாரணை நடத்தி வருகின்றனர்.