பாசிர் கூடாங் நச்சுக்காற்று; நடவடிக்கை எடுக்கக் கோரிக்கை

பாசிர் கூடாங் நச்சுக்காற்று; நடவடிக்கை எடுக்கக் கோரிக்கை

1 mins read
21a99250-fa6d-42c4-80d9-acc636e60bd4
பாசிர் கூடாங் உள்ளரங்கு. (படம்: ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ்) -

ஜோகூரின் பாசிர் கூடாங் மாவட்டத்தில் நச்சுக்காற்றால் பாதிக்கப்பட்ட 70க்கும் அதிகமானோர் மருத்துவமனைக்கு அனுப்பப்பட்டுள்ளனர். சுவாசப் பிரச்சினை, வாந்தி ஆகியவற்றால் அவதிப்படும் அவர்களின் நிலைக்கான காரணமோ இன்னும் அறியப்படவில்லை.

இவ்வாண்டு மார்ச் மாதத்தில் சுங்கை கிம் கிம் ஆற்றில் வீசப்பட்ட நச்சுப்பொருட்கள் முழுமையாக அகற்றப்படவில்லை என்றும் அவற்றிலிருந்து வெளிவரும் நச்சுத்தன்மை வாய்ந்த புகையே தற்போதைய நிலைக்குக் காரணம் என்றும் வீடமைப்பு மற்றும் உள்ளூர் அரசாங்க அமைச்சர் ஸுரைடா கமாருடின் ஆரம்பத்தில் தெரிவித்தார். ஆனால் இதற்கும் தற்போதைய சம்பவத்திற்கும் எந்தத் தொடர்பும் இல்லை என அவர் பின்னர் கூறினார். ஜோகூர் முதலமைச்சர் சாஹ்ருடின் ஜமாலும் இதனைத் தெரிவித்தார்.

ஆற்றில் வீசப்பட்ட நச்சுப்பொருட்களால் பாதிக்கப்பட்டோருக்கும் நச்சுக்காற்றால் பாதிக்கப்பட்டோருக்கும் இடையே நோய் அறிகுறிகள் மாறுபட்டிருப்பதாக மலேசிய சுகாதார அமைச்சர் ஸுல்கிஃப்லி அகமது தெரிவித்தார்.

திங்கட்கிழமை பிற்பகல் சுமார் 3 மணி நிலவரப்படி 75 மாணவர்கள் சுல்தான் இஸ்மைல் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டிருந்தனர். அவர்களில் நால்வர் இன்னும் மருத்துவமனையில் உள்ளனர்.

இதற்கிடையே, ரசாயனத் தூய்மைக்கேட்டுக்குக் காரணமானவர்களுக்கு எதிராக நடவடிக்கை எடுக்கப்படும் என்று மலேசிய அரசாங்கம் சூளுரைத்திருக்கிறது. "இது துரதிஷ்ட்வசமானது. இந்தச் சம்பவம் மீண்டும் நடந்திருக்கக் கூடாது," என்று மலேசிய பிரதமர் மகாதீர் முகம்மது தெரிவித்தார்.