ஜோகூரின் பாசிர் கூடாங் மாவட்டத்தில் ஏற்பட்டுள்ள காற்றுத் தூய்மைக்கேட்டிற்குக் காரணமானவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று மலேசிய பிரதமர் மகாதீர் முகம்மது தெரிவித்துள்ளார்.
"இந்தச் சம்பவம் துரதிர்ஷ்டவசமானது. இப்படியொரு சம்பவம் திரும்பவும் நிகழ்ந்திருக்கக்கூடாது. ஆனால், பாதுகாப்பில் அதிக அக்கறையின்றி சில தொழிற்சாலைகள் செயல்படுவதை நாம் காண முடிகிறது. ஆகையால், சுற்றுச்சூழலை மாசுபடுத்திய ஆலைகள் எவை என்பதைக் கண்டறிய வேண்டியுள்ளது. அவற்றின்மீது கடும் நடவடிக்கை எடுப்போம்," என்று டாக்டர் மகாதீர் கூறினார்.
33வது ஆசிய பசிபிக் வட்ட மேசை மாநாட்டில் சிறப்புரை ஆற்றிய டாக்டர் மகாதீர் இதனைத் தெரிவித்தார்.நச்சு வாயுவால் ஏற்பட்டுள்ள காற்றுத் தூய்மைக்கேடு காரணமாக பாசிர் கூடாங்கில் உள்ள அனைத்துக் கல்வி நிலையங்களையும் நாளை வியாழக்கிழமை வரை மூட மாநில கல்வி அமைச்சு உத்தரவிட்டுள்ளது. அங்கு 111 தொடக்க மற்றும் உயர்நிலைப் பள்ளிகள், மூன்று உயர்கல்வி நிலையங்கள், 14 தனியார் மற்றும் அனைத்துலகப் பள்ளிகள், 347 தனியார் பாலர் பள்ளிகள் என மொத்தம் 475 கல்வி நிலையங்கள் உள்ளன.
கடந்த வியாழக்கிழமை முதல் இருந்து வரும் காற்றுத் தூய்மைக்கேட்டால் இதுவரை 30க்கும் அதிகமான பள்ளிகளைச் சேர்ந்த 100க்கும் மேற்பட்ட மாணவர்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். பாசிர் கூடாங் மாவட்டத்தில் காற்றுத் தூய்மைக்கேடு காரணமாக அனைத்துப் பள்ளிகளையும் மூட உத்தரவிட்டிருப்பது கடந்த மூன்று மாதங்களில் இது இரண்டாவது முறை.
சென்ற மார்ச் மாதம், கிம் கிம் ஆற்றில் இருந்து ரசாயன நச்சுப் புகை கிளம்பியதால் அங்குள்ள தொடக்க, உயர்நிலைப் பள்ளிகள் அனைத்தையும் மூடும்படி உத்தரவிடப்பட்டது நினைவுகூரத்தக்கது.

