இதற்கிடையே, எம்ஏஎஸ் விமானம் ஒன்று புறப்படுவதற்கு தாமதம் ஏற்பட்டதால் அதிருப்தி கொண்ட மலேசிய தற்காப்பு அமைச்சர் முகம்மது சாபு, அதன் காரணமாக டாக்டர் மகாதீர் உடனான சந்திப்பில் தாம் கலந்துகொள்ள முடியாமல் போனதாகக் குறைபட்டுக்கொண்டார்.
இம்மாதம் 15ஆம் தேதி கோலாலம்பூரிலிருந்து எம்எச்2 விமானம் இரண்டரை மணி நேரம் கால தாமதமாக லண்டனுக்கு புறப்பட்டதால் அடுத்த நாள் டாக்டர் மகாதீர் உடனான முக்கிய சந்திப்பு தடைபட்டதாக அவர் வருத்தம் தெரிவித்தார்.
எம்ஏஎஸ் இதுபோன்ற கால தாமதத்தை இனிமேலும் ஏற்படாமல் பார்த்துக்கொள்ள வேண்டுமென அமைச்சர் சாபு கேட்டுக்கொண்டார்.
அமைச்சரின் இந்தச் சிரமத்திற்காக எம்ஏஎஸ் மன்னிப்புக் கேட்டுக்கொண்டது.
"அமைச்சருக்கு சந்திப்பு இருப்பது குறித்து எங்களுக்கு தெரியும். இருப்பினும், விமானம் பறப்பதற்குப் பாதுகாப்பாக இருப்பதை உறுதிசெய்வதில் நாங்கள் எந்தவொரு முயற்சியையும் கைவிட்டுவிட மாட்டோம்," என்று அந்நிறுவனம் வெளியிட்ட அறிக்கையில் கூறியதாக மலேசியாவின் தி ஸ்டார் நாளிதழ் குறிப்பிட்டது.

