ஜப்பானில் 'ஜி20' நாடுகளின் தலைவர்கள் சந்திக்கவிருக்கின்றனர். இவ்வேளையில் ஹாங்காங்கின் மத்திய வட்டாரத்தில் உள்ள 19 வெளிநாட்டுத் தூதரகங்களை நோக்கி அமைதிப் பேரணி நடத்திய ஆர்ப்பாட்டக்காரர்கள் 'ஜி20' நாடுகளின் தலைவர்கள் உதவ கோரிக்கை விடுத்துள்ளனர்.
ஹாங்காங் தலைமை நிர்வாகி கேரி லாமுக்கு அழுத்தம் தரும் வகையிலும் இந்தப் பேரணி நடைபெற்றது. ஹாங்காங்கில் சில குற்றச் செயல்களில் குற்றம் சாட்டப்பட்டவரை விசாரணைக்காக சீனாவுக்கு அனுப்பி வைக்க உதவும் மசோதாவை நிறைவேற்ற ஹாங்காங் நிர்வாகம் அண்மையில் பகீரத முயற்சியில் ஈடுபட்டது.
இதனால் கொதித்தெழுந்த மில்லியனுக்கு மேற்பட்ட ஹாங்காங் மக்கள் இரண்டு நாட்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். இதைச் சற்றும் எதிர்பாராத நிர்வாகம் மசோதாவை மீட்டுக் கொண்டதோடு தலைமை நிர்வாகி கேரிலாம் மன்னிப்பு கேட்டார். ஆனால் மசோதாவை முழுமையாக கைவிட வேண்டும் என்பது ஆர்ப்பாட்டக்காரர்களின் கோரிக்கையாகும். இதற்கு ஹாங்காங் நிர்வாகம் இன்று வரை செவிமடுக்கவில்லை.
இந்த நிலையில் 'ஜி20' நாடுகளின் உதவியை ஹாங்காங் மக்கள் நாடியுள்ளனர். 'ஜி20' அங்கம் வகிக்கும் அமெரிக்கா, பிரிட்டன் மற்றும் இதர ஐரோப்பிய நாடுகள் தங்களு டைய பிரச்சினையில் தலையிட்டு சீனாவுக்கு அழுத்தம் கொடுத்து சர்ச்சைக்குரிய மசோதாவை முழுமையாக கைவிட உதவ முடியும் என்று ஹாங்காங் மக்கள் நம்புகின்றனர்.
நேற்று இளையர்களைப் பெரும் அளவில் உள்ளடக்கிய சுமார் 100 பேர் கறுப்பு உடை அணிந்து மத்திய வட்டாரத்தில் உள்ள சாட்டர் கார்டனில் திரண்டனர்.பின்னர் மூன்று பிரிவுகளாகப் பிரிந்து ஒவ்வொரு குழுவினரும் அமெரிக்க தூதரகம், ஐரோப்பிய ஒன்றிய அலுவலகம், பிரிட்டிஷ் தூதரகம் ஆகியவற்றை நோக்கி நடந்து சென்றனர்.
'சீன காலனித்துவத்திலிருந்து ஹாங்காங்கை விடுவிக்க வேண்டும்', 'சுதந்திர ஹாங்காங்', 'ஹாங்காங்குக்கு உதவுக' போன்ற முழக்க வாசகங்களை அவர்கள் கையில் ஏந்தியிருந்தனர். பேரணி சென்ற வழியில் பல நூறு பேர் சேர்ந்துகொண்டனர்.

