ஜோகூர் பாரு: சுமார் 6.3 மில்லியன் ரிங்கிட் (S$2.05 மில்லியன்) ரொக்கப் பணத்தை சிங்கப்பூருக்குள் கடத்தும் முயற்சியை மலேசிய சுங்கத் துறை முறியடித்திருக்கிறது. திடீர் சோதனை நடத்தப்பட்டபோது இந்தப் பணம் கைப்பற்றப்பட்டதாக ஜோகூர் சுங்கத் துறை இயக்குநர் முகமது ஹமிதன் மர்யானி நேற்று செய்தியாளர்களிடம் கூறினார்.
துவாஸ் பாலம் வழியாக சிங்கப்பூருக்குக் கடத்தப்பட இருந்த ரொக்கப் பணம் ஹோண்டா அக்கார்ட் காரில் நான்கு பெட்டிகளில் மறைத்து வைக்கப்பட்டு இருந்தது கண்டுபிடிக்கப்பட்டதாகவும் அப்போது அந்த காரில் 25 வயதும் 26 வயதும் மதிக்கத்தக்க இரு ஆடவர்கள் இருந்தார்கள் என்றும் அவர் கூறினார்.
"பெட்டிகளைத் திறக்குமாறு அந்த ஆடவர்களுக்கு அமலாக்கப் பிரிவு அதிகாரிகள் உத்தரவிட்டனர். அவர்கள் அவற்றைத் திறந்தபோது மலேசிய, சிங்கப்பூர் அமெரிக்க நாணய நோட்டுகள் கத்தை கத்தையாக இருந்தன," என்றார் அவர். மலேசிய நோட்டுகள் மட்டும் 6 மில்லியன் ரிங்கிட்டுக்கு இருந்தன. குற்றவாளிகள் ஐந்தாண்டு வரையிலான சிறைத்தண்டனையை எதிர்நோக்குகிறார்கள்.

