கொழும்பு: இலங்கையில் போதைப்பொருள் குற்றவாளிகள் நால்வருக்கு மரண தண்டனை விதிக்கப்பட்டது. இதனை அந்நாட்டின் அதிபர் மைத்திரிபால சிறிசேன நேற்று செய்தியாளர்களிடம் தெரிவித்தார்.
"நான்கு குற்றவாளிகளுக்கு மரண தண்டனை நிறைவேற்றும் உத்தரவில் கையெழுத்துப் போட்டுவிட்டேன். தேதி முடிவு செய்யப்பட்டுவிட்டதால் அந்த மரண தண்டனை விரைவில் நிறைவேற்றப்படும்," என்றார் அவர். இருப்பினும் அந்த நான்கு பேர் யார் என்றும் மரண தண்டனை நிறைவேற்றப்
படும் தேதி குறித்தும் அவர் விவரிக்கவில்லை.
இலங்கையில் ஆகக் கடைசி யாக 43 ஆண்டுகளுக்கு முன் 1976 ஜூன் 23ல் மரண தண்டனை நிறைவேற்றப்பட்டது. நீண்டகாலமாக தூக்கில் போடுவதற்கான அவசியம் ஏற்படாததால் அப்பணியில் இருந்த சிறைச்சாலை ஊழியர் கடந்த 2014ஆம் ஆண்டு தமது வேலையிலிருந்து விலகினார்.
அதன் பின்னர், தூக்கில் போடுவதற்கான ஆட்களை நியமிக்க விண்ணப்பம் கோரப்பட்டது. பத்துக்கும் மேற்பட்டோர் தேர்ந்து எடுக்கப்பட்டு பட்டியலில் இருப்பதாகவும் இருப்பினும் இதுவரை யாரும் நியமிக்கப்படவில்லை என்றும் இலங்கை சட்ட அமைச்சு தெரிவித்துள்ளது.
சட்டவிரோத போதைப்பொருள் வர்த்தகத்தை முறியடிப்பதற்கான வலுவான ஆயுதம் மரண தண்டனை என்று அதிபர் அலுவலக அதிகாரி ஒருவர் கூறினார். நாடு முழுவதும் சுமார் 200,000 போதைப் புழங்கிகள் இருப்பதாகவும் சிறைக்கைதிகளாக உள்ள 24,000 பேரில் 60 விழுக்காட்டினர் போதைப்பொருள் குற்றத்திற்காக தண்டனை வழங்கப்பட்டவர்கள் என்றும் அதிபர் சிறிசேன கூறினார். இலங்கையில் மீண்டும் மரண தண்டனையை செயல்படுத்துவதற்கான பணிகள் நடப்பதை உணர்ந்த அனைத்துலக பொதுமன்னிப்பு அமைப்பு அதனை நிறுத்துமாறு வேண்டுகோள் விடுத்த நிலையில் அதிபரின் உத்தரவு வெளியாகி இருக்கிறது.

