ஈரான்: போரை எப்போதும் விரும்பியதில்லை

ஈரான்: போரை எப்போதும் விரும்பியதில்லை

1 mins read

டெஹ்ரான்: அமெரிக்காவுடன் போரிடுவதை ஈரான் எப்போதும் விரும்பியதில்லை என்று ஈரான் அதிபர் ஹசன் ரொஹானி கூறியுள்ளார். இவ்விரு நாடுகளுக்கும் இடையில் பதற்றம் நிலவி வரும் நிலையில் திரு ரொஹானி இவ்வாறு தெரிவித்துள்ளார்.

ஐஆர்என்ஐ என்னும் அரசாங்க செய்தி நிறுவனத்திற்கு நேற்று அவர் பேட்டியளித்தார். "இந்த வட்டாரத்தில் பதற்றம் அதிகரிப்பதில் ஈரானுக்கு விருப்பம் இல்லை. அதேபோல அமெரிக்கா உள்ளிட்ட எந்தவொரு நாட்டுடனும் போரிடுவதை ஈரான் ஒருபோதும்

விரும்பியதில்லை," என்றார் அதிபர் ரொஹானி.

கடந்த வாரம் அமெரிக்காவின் ஆளில்லா வானூர்தி ஒன்றை ஈரான் சுட்டு வீழ்த்தியதில் இருந்து இரு நாடுகளுக்கும் இடையில் வார்த்தைப் போர் நிகழ்ந்து வருகிறது. இந்நிலையில், பிரெஞ்சு அதிபர் இமானுவல் மேக்ரனுடன் திரு ரொஹனி தொலைபேசியில் உரையாடி இருக்கிறார்.

"வட்டார அமைதிக்கும் நிலைத்தன்மைக்கும் நாங்கள் கடப்பாடு கொண்டுள்ளோம். அதன் அடிப்படையில் எங்களது முயற்சிகள் தொடரும்," என்று திரு மேக்ரனிடம் ஈரானிய அதிபர் அப்போது கூறினார்.

வானூர்தி சுட்டு வீழ்த்தப்பட்டதற்குப் பதிலடியாக ஈரான் மீது தாக்குதல் நடத்த அமெரிக்க அதிபர் டோனல்ட் டிரம்ப் உத்தரவிட்டதாகவும் கடைசிக்கட்டத்தில் அந்த உத்தரவை அவர் மீட்டுக்கொண்டதாகவும் ஊடகத் தகவல்கள் தெரிவித்தன. இருந்தபோதிலும் தமது வான்வெளியில் அந்த வானூர்தி பறந்ததாக டெஹ்ரான் கூறுவதை அமெரிக்கா ஏற்க மறுத்தது.

இந்நிலையில், ஈரானின் உயர்மட்டத் தலைவர் அயத்துல்லா அலி காமெனி மீதும் மேலிடத் தலைவர்கள் மீதும் இவ்வாரம் அமெரிக்கா தடைகள் விதித்ததைத் தொடர்ந்து பதற்றம் அதிகரித்துள்ளது.