தலைவர்கள் சாமான்ய மக்களிடமிருந்து ஒதுங்கியிருக்காமல் அவர்களது துன்பங்களைப் புரிந்துகொள்ளவேண்டும் என்று மலேசியப் பிரதமர் மகாதீர் முகம்மது தெரிவித்திருக்கிறார். மக்களின் நிலை உணரும் பண்பு தலைமைத்துவத்தில் சில நேரங்களில் மறக்கப்படுவதாக டாக்டர் மகாதீர், 'ஒரு குரல், ஒரு நாடு' என்ற மாநாட்டில் உரையாற்றியபோது கூறினார்.
"சில நேரங்களில் தலைவர்கள் அரச அல்லது உயர்மட்ட வம்சத்தினராக இருக்கும்போது சாதாரண மக்களின் துன்பத்தைப் புரிந்துகொள்ளும் சுபாவம் அவர்களுக்கு இல்லாமல் இருக்கலாம்," என்று அவர் கோலாலம்பூரின் 'எஸ்ஸியேட்டா எரினா' உள்ளரங்கில் நடைபெற்ற அந்த மாநாட்டில் தெரிவித்தார்.
"தலைவர்களாக உயர்ந்த சாதாரணத் தலைவர்கள் சிலரும் மக்களின் துன்பத்தைக் கண்டும் காணாமலும் இருப்பதாக வாதிடப்படலாம். ஆனால் இந்நிலை அறியாமையால் நிகழ்ந்ததல்ல; பரிவின்மையால் ஏற்படுகிறது," என்றும் அவர் கூறினார்.
எளியோருக்கு உதவி செய்ய தலைவர்களை ஊக்குவிக்கும் டாக்டர் மகாதீர், அதே வேளையில் மக்கள் சொந்தக்காலில் நிற்கவும் தலைவர்கள் கற்றுக்கொடுக்கவேண்டும் என்றார். "இரண்டாம் உலகப்போர்க்காலத்தில் நான் பதின்ம வயதினராக இருந்தபோது என் கல்வி தற்காலிகமாகத் தடைப்பட்டது. ஆனால் நான் 'கோரேங் பீசாங்' (பொரித்த வாழைப்பழம்) பலகாரத்தை விற்றேன். வியாபாரம் நன்றாக ஓடியது. விடாமுயற்சியுடன் தேடிப்பார்த்தால் வாய்ப்புகள் என்றென்றும் இருக்கும் என்பதை நான் அப்போது உணர்ந்தேன்," என்று அவர் தெரிவித்தார்.
"பதவிக்கு வந்த பிறகு தங்களுக்கான வாய்ப்புகளை அமைத்துக்கொள்ள அனைவராலும் முடியாது என்பதைத் தெரிந்துகொண்டேன். அவர்களுக்கு உதவ அதிகார பலம் இருப்பவர்கள் சில நேரங்களில் உதவ வேண்டும் என்பதை நான் புரிந்துகொண்டேன். ஆனால் சொந்தக் காலில் நிற்கத்தான் உதவி என்ற எனது நிலைப்பாட்டில் எந்த மாற்றமும் இல்லை," என்றார் டாக்டர் மகாதீர்.
தமது வெற்றிக்குப் பின்னால் இருந்த மனைவி டாக்டர் சித்தி ஹஸ்மாவையும் டாக்டர் மகாதீர் பாராட்டினார். 63 ஆண்டுகளாகத் தம்முடன் வாழ்ந்த டாக்டர் ஹஸ்மாவுக்குச் சகிப்புத்தன்மை மிக அதிகம் என்றும் அவரால் தமது வாழ்க்கை மிகவும் சிறப்பாக இருப்பதாகவும் டாக்டர் மகாதீர் கூறினார்.

