டிரம்ப்: இந்தியாவின் வர்த்தக வரி உயர்வு ஏற்கத்தகாதது

டிரம்ப்: இந்தியாவின் வர்த்தக வரி உயர்வு ஏற்கத்தகாதது

1 mins read
0e8ad13b-7310-4306-9ff1-21de75601968
-

அமெரிக்க ஏற்றுமதிகளுக்கு இந்தியா வர்த்தக வரிகளை அண்மையில் உயர்த்தியது குறித்து அந்நாட்டின் பிரதமர் நரேந்திர மோடியுடன் பேச ஆவலாக இருப்பதாக அமெரிக்க அதிபர் டோனல்ட் டிரம்ப் தெரிவித்திருக்கிறார்.

"இது ஏற்கத்தக்கதன்று. இந்த வர்த்தக வரிகள் உடனே நீக்கப்படவேண்டும்," என்று திரு டிரம்ப் டுவிட்டரில் இன்று தெரிவித்தார்.

இந்த இரண்டு ஜனநாயகங்களுக்கு இடையிலான உறவில் வர்த்தகம், முதலீடு ஆகியவை பிணக்கங்களை ஏற்படுத்தியுள்ளன.

பாதாம், ஆப்பிள், வால்நட் உள்ளிட்ட அமெரிக்காவின் 28 ஏற்றுமதிப் பொருட்களின் மீதான வர்த்தக வரிகளை உயர்த்துவதாக இந்தியா கடந்த மாதம் அறிவித்தது. கடந்தாண்டு எஃகு, அலுமினியம் ஆகியவற்றுக்கான வரியை உயர்த்துவதாக இந்தியா அறிவித்தது.

"வர்த்தக வரிக்கு இந்தியா மன்னன்" என்று திரு டிரம்ப் கிண்டலாகக் கூறியுள்ளார். ஹார்லி டேவிட்சன் மீது இந்தியா விதித்துள்ள 50 விழுக்காடு வரியை அவர் உதாரணம் காட்டினார்.

அமெரிக்காவின் மருத்துவக் கருவிகள் மீதான விலைக்கட்டுப்பாட்டை அகற்றவும் அமெரிக்கப் பால் தயாரிப்புகளின் விற்பனை மீதான கட்டுப்பாடுகளைத் தளர்த்தவும் அந்நாடு இந்தியாவிடம் கேட்டுள்ளது.