ஜோகூர்: பாசிர் கூடாங்கில் ரசாயனக் கசிவால் ஏற்பட்ட காற்றுத் தூய்மைக்கேடு இகழத்தக்கது என்றும் அவமானத்திற்குரியது என்றும் ஜோகூர் சுல்தான் இப்ராஹிம் அல்மர்ஹும் சுல்தான் இஸ்கந்தர் சாடியிருக்கிறார்.
இந்த சம்பவங்கள் குறித்து பதிலளிக்க மாநிலத் தலைவர்களையும் மத்திய அமைப்பு களையும் அழைத்திருப்பதாக சுல்தான் இப்ராஹிம் தெரி வித்தார்.
மூன்று மாதங்களுக்குள் அதே இடத்தில் இது போன்ற ஒரு சம்பவம் எப்படி நடந்தது என அதிகாரிகளிடம் கேட்கப்போவதாக அவர் கூறினார்.
"முதல் சம்பவத்திற்குப் பிறகு எல்லாம் சரியாக இருப்பதாக அரசியல்வாதிகளும் அதிகாரிகளும் எங்களுக்கு உத்தரவாதம் அளித்திருந்தனர். ஆனால் மூன்று மாதங்கள்கூட ஆகாத நிலையில் ஜோகூர் மக்கள் இந்தப் பிரச்சினையை மீண்டும் எதிர்நோக்குகின்றனர். இது இகழத்தக்கது, அவமானத்திற்குரியது," என்று ஜோகூர் சுல்தான் கூறினார்.
கடந்த மார்ச் மாதம் நிகழ்ந்த முதல் சம்பவத்தில் மீத்தேன் எரிவாயு காற்றில் கலந்தது. இதில் கிட்டத்தட்ட 4,000 பேர் மருத்துவமனைக்குச் செல்லவேண்டியிருந் ததை அவர் சுட்டினார்.
தற்போதைய இரண்டாவது சம்பவத்தில் பாசிர் கூடாங்கில் 111 தொடக்க மற்றும் இடைநிலைப் பள்ளிகள், 14 தனியார் மற்றும் அனைத்துலகப் பள்ளிகள், 347 பாலர் பள்ளிகள் ஆகியவை மூன்று நாட்களுக்கு மூடப்பட்டன. இம்மாதம் 20ஆம் தேதியிலிருந்து இதுவரை 30 பள்ளிகளைச் சேர்ந்த 100க்கும் அதிகமான மாணவர்கள் சிகிச்சை பெற்று உள்ளனர்.
இதற்கிடையே, பாசிர் கூடாங் பகுதியில் ஏற்பட்ட ரசாயனக் கசிவுக்கு காரணமான மூன்று வகை எரிவாயுவை மலேசிய அதிகாரிகள் கண்டறிந்துள்ளனர்.
சிறுவர்களிடையே, குறிப்பாக ஆஸ்துமா நிலை உள்ளவர்கள் இடையே மோசமான சுகாதார விளைவுகளை இந்த எரிவாயு ஏற்படுத்தக்கூடும் என்று மலேசியா வின் எரிசக்தி, அறிவியல், தொழில்நுட்பம், சுற்றுச்சூழல் துறை அமைச்சர் இயோ பீ யின் தெரிவித்துள்ளார்.
இருப்பினும், பாதிக்கப்பட்டவர்களிடமிருந்து எடுக்கப்பட்ட ரத்த மாதிரியில் இந்த வகை எரிவாயு கண்டறியப்படவில்லை என்று அவர் நேற்று கூறினார்.

