ஒசாகா: அமெரிக்காவுக்கும் ஜப்பானுக்கும் இடையே பல ஆண்டுகளுக்கு முன்பு செய்து கொள்ளப்பட்ட தற்காப்பு ஒப்பந்தம் மாற்றப்பட வேண்டும் என்று அமெரிக்க அதிபர் டோனல்ட் டிரம்ப் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து ஜப்பான் பிரதமர் ஷின்சோ அபேயிடம் தெரிவித்து விட்டதாக அவர் கூறினார்.
அமெரிக்காவுக்கும் ஜப்பா னுக்கும் இடையிலான தற்காப்பு ஒப்பந்தம் நியாயமற்றது என அதிபர் டிரம்ப் தெரிவித்தார்.
இருப்பினும், ஒப்பந்தத் திலிருந்து பின்வாங்கப்போவ தில்லை என்று கூறிய அதிபர் டிரம்ப், ஆசிய பசிபிக் வட்டாரத்தின் நிலைத்தன்மைக்கு அது மிகவும் முக்கியமானது என்று கூறினார்.
ஆசிய பசிபிக் வட்டாரத்துக்கு அந்த ஒப்பந்தம் நன்மை பயக்கும்போதிலும் அமெரிக்கா வுக்கு அது ஒரு பாரமாகவே இருந்து வருவதாக அவர் குறைகூறினார்.
"ஒப்பந்தத்தை மாற்ற வேண்டும் என்று ஷின்சோ அபேயிடம் கூறினேன். யாராவது ஜப்பானைத் தாக்கினால் ஜப்பானுக்கு ஆதரவாக அமெரிக்கா செயல்பட்டு பகைவருக்கு எதிராகப் போர் தொடுக்கும். ஆனால் அதே நிலை அமெரிக்காவுக்கு ஏற்பட்டால் ஜப்பான் உதவி செய்ய வேண்டிய அவசியம் இல்லை. இது நியாயமற்றது," என்றார் அதிபர் டிரம்ப்.
தற்போது நடப்பில் உள்ள ஒப்பந்தம், இரண்டாம் உலகப் போரில் ஜப்பான் அமெரிக்காவிடம் சரணடைந்தபோது கையெழுத்திடப் பட்டது. அதன்படி ஜப்பானை அமெரிக்கா தற்காக்க வேண்டும். பதிலுக்கு ஜப்பானிய மண்ணில் ராணுவத் தளங்களை அமெரிக்கா அமைக்க ஜப்பான் அனுமதிக்க வேண்டும்.
இதன் விளைவாக ஒகினா வாவில் மிகப் பெரிய அமெரிக்கக் கடற்படை முகாம் இருக்கிறது.
தலைநகர் தோக்கியோவுக்கு அருகில் உள்ள யொகோசுகா கடற்படை முகாமில் அமெரிக்க ஆகாயப் படை செயல்பட்டு வருகிறது.
சீனாவின் ராணுவ ஆதிக்கம் அதிகரித்து வரும் வேளையில் ஆசியாவிலிருந்து அமெரிக்கா அதன் படைகளை மீட்டுக் கொள்வது குறித்து பல நாடுகள் அக்கறை தெரிவித்துள்ளன.

