ஹாங்காங்: சீனாவிடம் ஹாங்காங் ஒப்படைக்கப்பட்ட 22வது ஆண்டு நிறைவு நாளான இன்று ஏற்பாடு செய்யப்பட்டுள்ள ஊர்வலத்தில் அதிகமான மக்கள் கலந்து கொள்ளக்கூடும் என்று எதிர் பார்க்கப்படுகிறது.
ஹாங்காங்கில் குற்றம் சாட்டப்பட்டவர்களை சீனாவுக்கு அனுப்பி விசாரிக்கும் சர்ச்சைக் குரிய மசோதாவுக்கு எதிர்ப்பு வலுத்து வருவதால் இன்றைய ஊர்வலத்தில் வழக்கத்திற்கும் அதிகமாக மக்கள் திரளாக கலந்துகொள்ளக்கூடும் என்று தெரிகிறது.
1997ஆம் ஆண்டு சீனாவிடம் ஹாங்காங் ஒப்படைக்கப்பட்டது முதல் ஆண்டு நிறைவு நாளான ஜூலை முதல் தேதி ஹாங்காங்கில் ஆர்ப்பாட்டப் பேரணி நடைபெறும்.
மக்கள் மனித உரிமை முன்னணி என்ற அமைப்பு ஏற்பாடு செய்யும் இத்தகைய ஆர்ப்பாட்டத்தில் முந்தைய ஆண்டுகளில் சுமார் 400,000 பேர் கலந்துகொண்டதாக தகவல் கள் கூறுகின்றன.
ஹாங்காங் விவகாரங்களில் சீனாவின் தலையீடு நிறுத்தப்பட வேண்டும் என்பதை வலியுறுத்தி மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டு வந்தனர். தற்போது சர்ச்சைக்குரிய மசோதாவை ரத்து செய்யக்கோரி மக்கள் போராட்டங்களில் ஈடுபட்டு வருகின்றனர். கடந்த ஜூன் 12ம் தேதி ஆர்ப்பாட்டக்காரர்கள் சட்டமன்றக் கட்டட வளாகத்திற்கு முன்பு முற்றுகைப் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
அதைக் கலவரம் என்று கூறிய ஹாங்காங் போலிசார், கூட்டத் தினர் மீது அடக்குமுறையைக் கையாண்டதில் பலர் காயம் அடைந்தனர். போலிசாரின் அடக்குமுறைக்கு எதிர்ப்பு வலுத்த நிலையில் சர்ச்சைக்குரிய அந்த மசோதாவை நிறுத்திவைப்பதாக ஹாங்காங் தலைமை நிர்வாகி திருமதி கேரி லாம் தெரிவித்தார்.
ஆனால் அந்த மசோதா ரத்து செய்யப்படாத வரை ஆர்ப்பாட்டங் கள் தொடரும் என்றும் திருமதி கேரி லாம் பதவி விலக வேண்டும் என்றும் போராட்டக்காரர்கள் வலியுறுத்தி வருகின்றனர். அத்துடன் முந்தைய ஆர்ப்பாட்டங் களின் போது கைது செய்யப் பட்டவர்களை விடுதலை செய்ய வேண்டும் என்றும் அவர்கள் கோரிக்கை விடுத்து வருகின்றனர்.
ஹாங்காங்கில் கடந்த மூன்று வாரங்களில் மட்டும் சுமார் 1 மில்லியன் மக்கள் தெருக்களில் முற்றுகைப் போராட்டங்களில் ஈடுபட்டதாக தகவல்கள் கூறு கின்றன.

