வெலிங்டன்: நியூசிலாந்து நேற்றிலிருந்து ஒருமுறை பயன்படுத்தப்படும் பிளாஸ்டிக் பைகளுக்குத் தடை விதித்துள்ளது. தடையை மீறி பிளாஸ்டிக் பைகளைப் பயன்படுத்தும் நிறுவனங்களுக்கு 67,000 டாலர் வரையிலான அபராதம் விதிக்கப்படும் என்று எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
பிளாஸ்டிக் பைகளுக்குப் பதிலாக மறுபயனீடு செய்யக்கூடிய பைகளைப் பயன்படுத்துமாறு நியூசிலாந்து அரசு அதன் மக்களைக் கேட்டுக்கொண்டுள்ளது.பெருங்கடலில் பிளாஸ்டிக் பைகள் குவிந்து கிடப்பதால் பல்லாயிரக்கணக்கான கடல்வாழ் உயிரினங்களும் பறவைகளும் உயிரிழந்துள்ளன. இதில் சில வகை உயிரினங்கள் அருகிவரும் நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளது சுற்றச்சூழல் ஆர்வலர்களைக் கவலையடையச் செய்துள்ளது.
பிளாஸ்டிக் தூய்மைக்கேடு பூமியையும் பெரியளவில் பாதிக்கும் என்று ஆய்வாளர்கள் கூறுகின்றனர். தற்போது 70க்கும் மேற்பட்ட நாடுகள் ஒருமுறை பயன்படுத்தும் பிளாஸ்டிக் பைகளுக்குத் தடை விதித்துள்ளன.

