பள்ளிகளை ரசாயன ஆலைகள் தத்தெடுக்க வேண்டும்: மலேசிய அமைச்சர் வலியுறுத்து

பள்ளிகளை ரசாயன ஆலைகள் தத்தெடுக்க வேண்டும்: மலேசிய அமைச்சர் வலியுறுத்து

1 mins read

ஜோகூர் பாரு: பாசிர் கூடாங் பகுதியில் உள்ள ரசாயன ஆலைகள் தங்களுக்கு அருகே அமைந்துள்ள பள்ளிகளைத் தத்தெடுக்க வேண்டும் என்று மலேசிய எரிசக்தி, அறிவியல், தொழில்நுட்ப, சுற்றுச்சூழல், பருவநிலை மாற்றத்திற்கான அமைச்சர் இயோ பீ யின் வலியுறுத்தியுள்ளார்.

அப்படித் தாங்கள் தத்தெடுக்கும் பள்ளிகளுக்கு நச்சுவாயு கண்டறியும் சாதனங்களை அந்த ஆலைகள் கட்டாயமாக வழங்க வேண்டும் என்றும் அப்பள்ளிகளில் அவ்வப்போது காற்றின் தரத்தைச் சோதிக்க வேண்டும் என்றும் திருவாட்டி இயோ கூறினார்.

"காற்றுத் தரம் குறித்து தொடர்ச்சியாக தரவுகளைப் பெறுவதை உறுதிப்படுத்தும் வழிகளுள் இதுவும் ஒன்று. காற்றுத்தரக் குறியீடு அதிகமாக இருக்கும் பட்சத்தில், 'கேஸ்மெட்' கருவியைக் கொண்டு பாசிர் கூடாங் நகராட்சி மன்றம் இன்னும் துல்லியமாக காற்றுத் தரக் குறியீட்டை அளவிடும். அனைத்து வேதி ஆலைகளும் காற்றில் நச்சுவாயு கலந்திருப்பதைக் கண்டறியும் சாதனங்களை பள்ளிகளுக்கு வழங்கவேண்டும் என்பதை சுற்றுச்சூழல் துறை கட்டாயமாக்கி இருக்கிறது," என்று அவர் தெரிவித்தார்.

தற்காலிகமாக அத்தகைய சாதனங்களை அரசாங்கம் அந்த ஆலைகளுக்கு வாடகைக்குக் கொடுக்கும் என்றும் அவர் சொன்னார்.

பாசிர் கூடாங்கில் உடனடியாக காற்றுத் தூய்மைக்கேடு கண்காணிப்பு நிலையம் ஒன்றை அமைக்க நிதி ஒதுக்குமாறு அமைச்சரவையிடம் கோரிக்கை மனு அளிக்கப்போவதாகவும் அவர் கூறினார். அங்கு தற்போது 250 வேதி ஆலைகளும் 111 தொடக்க, உயர்நிலைப் பள்ளிகளும் செயல்பட்டு வருகின்றன.