மெக்சிகோவில் மக்கள் தொகை ஆக அதிகமுள்ள நகரங்களில் ஒன்றான குடலஜாராவில் ஆலங்கட்டி மழை திடீரெனப் பெய்து அந்நகரை மூழ்கடித்தது. இரண்டு மீட்டர் உயரம் வரை ஆலங்கட்டிகள் நேற்றிரவு பெய்துகொண்டிருந்ததாக நகர அதிகாரிகள் தெரிவித்தனர்.
வேடிக்கை என்னவென்றால், மெக்சிகோவில் தற்போது வெப்பப்பருவம் நிலவுகிறது. சராசரி வெப்பநிலை கிட்டத்தட்ட 31 டிகிரி செல்சியசாக உள்ளது. அப்படி இருக்க, ஆலங்கட்டி மழை இந்த அளவுக்குப் பெய்தது எப்படி என்பதற்கான விளக்கத்தை அறியாமல் அதிகாரிகள் திணறுகின்றனர்.
"இத்தகைய ஒரு சம்பவம் குடலஜாராவில் நடந்ததை நான் இதுவரை பார்த்ததில்லை," என்று மாநில ஆளுநர் என்ரிக் அல்ஃபாரோ செய்தியாளர்களிடம் திகைப்புடன் தெரிவித்தார். "உண்மையிலேயே உலகம் வெப்பமயமாகிறதா என்பதைப் பற்றி நாம் யோசிக்க வேண்டியுள்ளது. இதுபோன்ற தீவிரப் பருவநிலை மாற்றங்கள் இந்நாள் வரை காணப்பட்டதில்லை. இது வியப்புக்குரியது," என்று அவர் கூறினார்.
இரவு நேரத்தில் பலர் தங்கள் வீட்டுக்குள் இருந்ததால் உயிர்ச்சேதம் எதுவும் ஏற்படவில்லை. இருந்தபோதும் 200 கட்டடங்களும் 50 வாகனங்களும் சேதமடைந்ததாக மெக்சிகோ ஊடகங்கள் குறிப்பிடுகின்றன. இருவரின் உடல் வெப்பநிலை வெகுவாகக் குறைந்து அவர்கள் மருத்துவ உதவியை நாட வேண்டியிருந்ததாகவும் ராய்ட்டர்ஸ் செய்தி நிறுவனம் தெரிவித்தது.

