துங்கு அட்னான் ஊழல் வழக்கு விசாரணை தொடங்கியது

துங்கு அட்னான் ஊழல் வழக்கு விசாரணை தொடங்கியது

2 mins read

கோலாலம்பூர்: மலேசியாவின் முன் னாள் அமைச்சர் துங்கு அட்னான் துங்கு மன்சூருக்கு எதிரான ஊழல் வழக்கு விசாரணை நேற்று தொடங் கியது.

மலேசியாவின் பிரதமராக நஜிப் ரசாக் இருந்தபோது துங்கு அட்னான் கூட்டரசுப் பிரதேச அமைச்சராக இருந்தார்.

அப்போது அவர் தமது அமைச் சின்கீழ் நடத்தப்படும் திட்டங்களுக்கு ஒப்புதல் வழங்க லஞ்சம் வாங்கியதாகக் கூறப்படுகிறது.

தலைநகர் கோலாலம்பூர், நிர்வாகத் தலைநகர் புத்ராஜெயா, லாபுவான் ஆகிய இடங்களுக்கான திட்டங்கள் துங்கு அட்னானின் அதிகாரத்துக்குக் கீழ் இருந்தது.

சொத்து மேம்பாட்டு நிறுவனமான எசெட் கயாமாஸின் இயக்குநர் சாய் கின் ஹோங்கிடமிருந்து 2016ஆம் ஆண்டு ஜூன் மாதம் 14ஆம் தேதியன்று துங்கு அட்னான் 2 மில்லியன் ரிங்கிட் லஞ்சம் வாங்கியதாகக் குற்றச்சாட்டு பதிவாகி இருப்பதாக பெர்னாமா செய்தி நிறுவனம் தெரிவித்தது.

2013ஆம் ஆண்டில் கோலா லம்பூரில் நடத்தப்பட இருந்த திட்டம் ஒன்று தொடர்பாக வர்த்தகர் டான் எங் பூனிடமிருந்து துங்கு அட்னான் 1 மில்லியன் வெள்ளி லஞ்சம் வாங்கியதாகவும் குற்றம் சாட்டப் பட்டுள்ளது.

தமக்கு எதிராகப் பதிவு செய்யப்பட்டிருக்கும் குற்றச்சாட்டு களை துங்கு அட்னான் மறுத்துள்ளார்.

கடந்த ஆண்டு நடைபெற்ற பொதுத் தேர்தலில் மலேசியாவை பல ஆண்டுகளாக ஆட்சி செய்த அம்னோ தலைமையிலான தேசிய முன்னணி கூட்டணி தோல்வி அடைந்தது.

பக்கத்தான் ஹரப்பான் கூட்டணி ஆட்சி அமைத்த பிறகு அம்னோவின் முக்கிய தலைவர்கள் ஊழல் வழக்கில் சிக்கியுள்ளனர்.

முன்னாள் பிரதமர் நஜிப் ரசாக், துணைப் பிரதமர் அகமது ஹமீது சஹித் ஆகியோருடன் மூன்றாவது நபராக துங்கு அட்னானும் ஊழல் குற்றச்சாட்டுகளை எதிர்நோக்குகிறார்.

மற்றோர் அம்னோ தலைவரான இசா சமாட்டுக்கு எதிராகவும் ஊழல் குற்றச்சாட்டுகள் பதிவாகி உள்ளன. இசா சமாட் அம்னோவின் உதவித் தலைவராகவும் முன்னாள் அமைச்சராகவும் இருந்தவர்.

ஃபெல்டா அமைப்பின் தலைவராக அவர் பதவி வகித்தபோது சரவாக் தலைநகர் கூச்சிங்கில் உள்ள ஒரு ஹோட்டல் சட்டத்துக்குப் புறம்பான முறையில் வாங்கப்பட்டதாக அவர் மீது குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.

அதுதொடர்பாக நம்பிக்கைத் துரோகக் குற்றத்தின் பேரில் ஒரு குற்றச்சாட்டையும் ஊழல் குற்றத்தின் பேரில் ஒன்பது குற்றச்சாட்டுகளையும் அவர் எதிர்நோக்குகிறார்.

இந்த வழக்கு விசாரணை வரும் அக்டோபர் மாதம் விசாரிக்கப்படும்.