இலங்கை: முன்னாள் தற்காப்புச் செயலர், போலிஸ் தலைவர் கைது

இலங்கை: முன்னாள் தற்காப்புச் செயலர், போலிஸ் தலைவர் கைது

1 mins read
dd124a3c-a038-46aa-a281-85c772e87fee
போலிஸ் தலைவர் புஜித் ஜயசுந்தரா -

கிட்டத்தட்ட 260 பேரைப் பலிகொண்ட ஈஸ்டர் ஞாயிறு பயங்கரவாதத் தாக்குதல்களைத் தடுக்கத் தவறிவிட்டதாகக் கூறி பணியிடை நீக்கம் செய்யப்பட்ட போலிஸ் தலைவரையும் முன்னாள் தற்காப்புச் செயலாளரையும் இலங்கை குற்றப் புலனாய்வுத் துறை கைது செய்துள்ளது.

கடந்த ஏப்ரல் 22ஆம் தேதி மூன்று ஹோட்டல்களிலும் மூன்று தேவாலயங்களிலும் நிகழ்த்தப்பட்ட பயங்கரவாதத் தாக்குதல்கள் தொடர்பில் குற்றப் புலனாய்வுத் துறை அலுவலகத்தில் முன்னிலையாகி விளக்கம் அளிக்கும்படி போலிஸ் தலைவர் புஜித் ஜயசுந்தராவுக்கும் முன்னாள் தற்காப்புச் செயலாளர் ஹேமசிறி ஃபெர்னாண்டோவுக்கும் நோட்டீஸ் அனுப்பப்பட்டது. இந்நிலையில், அவ்விருவரும் தங்களுக்கு உடல்நலக்குறைவு ஏற்பட்டுள்ளதாகக் கூறி, நேற்று முன்தினம் வெவ்வேறு மருத்துவ மனைகளில் அனுமதிக்கப்பட்டனர்.

ஆயினும், மருத்துவமனைகளுக்கே நேரில் சென்ற குற்றப் புலனாய்வுத் துறை அதிகாரிகள், அவர்களிடம் விசாரணை நடத்தி, பின்னர் கைது செய்தனர். அதைத் தொடர்ந்து, அவர்கள் இருவரையும் நேற்று வரை காவலில் வைக்கும்படி நீதிபதி உத்தரவிட்டார்.

ஈஸ்டர் ஞாயிறு பயங்கரவாதத் தாக்குதல்கள் தொடர்பில் அவ்விருவரும் சந்தேகப் பேர்வழிகள் பட்டியலில் இடம்பெற்றுள்ளது குறிப்பிடத்தக்கது.