ஹாங்காங்: ஹாங்காங்கில் அண்மையில் நடைபெற்ற ஆர்ப்பாட்டங்களால் வர்த்தக சமூகத்தினர் கவலையடைந்துள்ளனர்.
உலகின் நிதி மையம் என்ற தகுதியை இழந்துவிடுவோம் என்றும் அவர்கள் அச்சம் தெரிவித்துள்ளனர்.
சென்ற செவ்வாய்க்கிழமை நகரின் மையத்தில் திரண்ட ஆர்ப்பாட்டக்காரர்களை கண்ணீர்ப் புகையை வீசியும் மிளகு கலந்த தண்ணீரைப் பீய்ச்சியடித்தும் காவல்துறையினர் கலைத்தனர்.
இந்த நகர மையத்தில்தான் உலகளவில் பிரபலமான ஹெச்எஸ்பிசி உட்பட உலகின் ஆகப்பெரிய நிறுவனங்கள் செயல்படுகின்றன.
சில குறிப்பிட்ட குற்றச்செயல்களில் ஈடுபடுபவர்களை சீனாவுக்கு நாடு கடத்தும் மசோதாவுக்கு எதிராக கடந்த சில வாரங்களாக ஆர்ப்பாட்டங்கள் நடைபெற்றன.
"ஆர்ப்பாட்டங்களால் ஹாங்காங்கின் மதிப்புக்கு களங்கம் ஏற்படும்," என்று நிதித்தொழில் நுட்பத் துறையில் பணியாற்றும் யூமி யூங், 35 தெரிவித்தார்.
சில நிறுவனங்கள் ஹாங்காங்கை விட்டு வெளியேற விரும்புகின்றன அல்லது தலைமையகத்தையாவது மாற்ற விரும்புகின்றன என்றார் அவர். ஹாங்காங்கின் சட்டத்தினாலும் நிலைத்தன்மையினாலும் ஏறக்குறைய 1,500 பன்னாட்டு நிறுவனங்கள் ஹாங்காங்கை ஆசியாவின் தாயகமாகக் கருதி செயல்பட்டு வருகின்றன. இந்த நிலையில் அண்மைய ஆர்ப்பாட்டங்கள் ஹாங்காங் மீதான நல்லெண்ணத்தை கெடுத்துவிடும் என்று வர்த்தக சமூகத்தினர் கூறுகின்றனர்.
கடந்த 1997ஆம் ஆண்டில் ஹாங்காங்கை சீனாவிடம் பிரிட்டன் ஒப்படைத்தது. அப்போது 'ஒரே நாடு, இரு நடைமுறைகள்' கடைப்பிடிக்கப்படும் என்று சீனா அறிவித்திருந்தது.
இதனால் ஹாங்காங் தனிச் சுதந்திரமான நகரமாக செயல்படும் என்று எதிர்பார்க்கப்பட்டது.
ஆனால் சில குற்றச்செயல்களில் ஈடுபடுபவர்களை நாடு கடத்த வகை செய்யும் மசோதாவை நிறைவேற்ற ஹாங்காங் நிர்வாகம் முயற்சி செய்ததால் கலவரம் வெடித்தது. இதற்கிடையே சேதமடைந்த சட்டமன்றக் கட்டடத்தை சீர் செய்ய 1.7 மில்லியன் டாலர் செலவாகும் என மதிப்பிடப்பட்டுள்ளது.

