டிரம்ப்: தடுப்புக்காவல் நிலையங்கள் மோசமாக இருந்தால் சட்டவிரோதமாக நுழையாதீர்கள்

டிரம்ப்: தடுப்புக்காவல் நிலையங்கள் மோசமாக இருந்தால் சட்டவிரோதமாக நுழையாதீர்கள்

1 mins read
6c2594a7-b314-442d-9019-886600453212
-

கள்ளக் குடியேறிகள் தங்க வைக்கப்படும் தடுப்புக்காவல் நிலையங்கள் மோசமாக இருப்பதாகக் கூறும் கண்டனங்களை அமெரிக்க அதிபர் டோனல்ட் டிரம்ப் தட்டிக்கழித்திருக்கிறார்."அவசரமாகக் கட்டி முடிக்கப்பட்ட அல்லது மறுவடிவமைக்கப்பட்ட தடுப்புக்காவல் நிலையங்களின் சூழல் குறித்து கள்ளக் குடியேறிகளுக்கு வருத்தமாக இருந்தால் அவர்களை இங்கு வரவேண்டாம் எனச் சொல்லுங்கள். அனைத்துப் பிரச்சினைகளும் தீரும்" என்று திரு டிரம்ப் டுவிட்டரில் கூறினார்.

இத்தகைய நிலையங்களில் இருப்பவர்களின் தொகை அபாயகரமான அளவில் நிரம்பி வழிவதாக அமெரிக்க உள்துறை அறிக்கை எச்சரித்ததை அடுத்து திரு டிரம்ப்பின் கருத்துகள் வெளிவந்தன. போதிய குடிநீர், குளியல் வசதி, மருந்துகள் ஆகியவை இன்றி அந்த நிலையங்களில் இருப்பவர்கள் தவிப்பதாக அந்நிலையங்களுக்குச் சென்றிருந்த ஜனநாயகக் கட்சி நாடாளுமன்ற உறுப்பினர்கள் தெரிவித்தனர்.

இந்த நிலையங்களை மூடி கள்ளக் குடியேறிகள் அனைவரையும் குடிமக்களாக அமெரிக்காவிலேயே தங்க அனுமதிக்குமாறு சிலர் டிரம்ப் நிர்வாகத்தைக் கோரி வருகின்றனர். பெரும்பாலும் மெக்சிகோவிலிருந்து அமெரிக்காவுக்குச் செல்லும் இந்தக் குடியேறிகளை டிரம்ப் நிர்வாகம் மனிதாபிமானத்துடன் நடத்துவதில்லை என்று ஜனநாயகக் கட்சியினர் குறைகூறி வருகின்றனர். ஆனால் இந்த யோசனைக்குப் பொதுமக்கள், குறிப்பாக எல்லைப்பகுதிவாழ் மக்கள் பலர் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்.