வெளிநாட்டுத் திறனாளர்களுக்கான ஆகச் சிறந்த நாடு என்ற இடத்தை சிங்கப்பூரிடமிருந்து சுவிட்சர்லாந்து தட்டிப் பறித்துள்ளது. உலகின் ஆகப் பெரிய தனியார் வங்கிகள், பங்குச் சந்தை நிறுவனங்கள், மருந்து உற்பத்தி நிறுவனங்கள் ஆகியவற்றுக்கு இல்லமாக இருக்கும் சுவிட்சர்லாந்து வசிப்பதற்கும் வேலை செய்வதற்கும் ஆகச் சிறந்த இடமாக இருப்பதாக ஹெச்எஸ்பிசி வெளியிட்ட ஆய்வு ஒன்று குறிப்பிடுகிறது.
கடந்த நான்கு ஆண்டுகளாக முதலிடம் வகித்த சிங்கப்பூர் இப்போது இரண்டாவது நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளது. சுவிட்சர்லாந்து கடந்த ஆண்டில் எட்டாம் நிலையில் இருந்தபோதும் இவ்வாண்டு முதலாம் இடத்திற்குத் தாவியுள்ளது.சுவிட்சர்லாந்தின் சராசரி வருடாந்திர வருமானம் 111,587 அமெரிக்க டாலர். 12ஆவது பதிப்பாக வெளியிடப்பட்டுள்ள இந்தக் கருத்தாய்வில் ஆராயப்பட்ட 33 நாடுகளின் சராசரி வருடாந்திர வருமானமான 75,966 அமெரிக்க டாலரைவிட இது அதிகம். சுவிட்சர்லாந்திற்குச் சென்ற பிறகு செலவு செய்வதற்கான வருமானம் தம்மிடம் அதிகமாக இருப்பதாக வெளிநாட்டுத் திறனாளர்களில் பத்தில் எழுவர் தெரிவித்தனர்.
இருந்தபோதும் பிள்ளைகளை உடன் அழைத்து வரும் திறனாளர்களுக்கு சிங்கப்பூர் ஆகச் சிறந்த இடமாகத் தரவரிசைப்படுத்தப்பட்டுள்ளது. இங்கு தங்கள் பிள்ளைகள் சுலபமாகப் பல மொழிகளைக் கற்றுக்கொள்ள முடிவதாகத் திறனாளர்களில் 69 விழுக்காட்டினர் தெரிவித்தனர். தங்களது சொந்த நாட்டின் கல்வி முறையைக் காட்டிலும் சிங்கப்பூரின் கல்வி முறை சிறந்தது என்று 62 விழுக்காட்டினர் கூறியதாக ஆய்வு குறிப்பிடுகிறது.

