ஆபாச காணொளி விவகாரம்: பிகேஆர் கட்சியிலிருந்து ஹஸிக் நீக்கம்

ஆபாச காணொளி விவகாரம்: பிகேஆர் கட்சியிலிருந்து ஹஸிக் நீக்கம்

1 mins read

கோலாலம்பூர்: சர்ச்சைக்குரிய ஓரினப் புணர்ச்சி காணொளியில் மலேசிய பொருளியல் விவகார அமைச்சர் அஸ்மின் அலியோடு இருப்பது நான்தான் எனப் பகிரங்கமாக அறிவித்த ஹஸிக் அஸிஸ், அந்த அறிவிப்பு விடுத்த மூன்று வாரங்கள் கழித்து பிகேஆர் கட்சியிலிருந்து நீக்கப்பட்டுள்ளார்.

பிகேஆர் கட்சியின் ஒழுங்கு நடவடிக்கை குழுவின் முடிவுக்கு ஏற்ப இந்த முடிவு எடுக்கப்பட்டதாகவும் இந்த முடிவு ஏகமனதாக எடுக்கப்பட்டது என்றும் பிகேஆர் கட்சித் தலைவர் அன்வார் இப்ராஹிம் நேற்று முன்தினம் அறிவித்தார்.

சந்துபோங் தொகுதி இளையர் பிரிவுத் தலைவரான ஹஸிக், பிகேஆர் கட்சித் தலைமைத்துவம் ஊழலில் ஈடுபட்டிருக்கிறது என எந்தவித ஆதாரமுமின்றி குற்றம் சாட்டியிருப்பதால் அவரைக் கட்சியிலிருந்து நீக்கும் முடிவு எடுக்கப்பட்டதாக அன்வார் விளக்கினார்.

ஹஸிக்கிடம் வழங்கப்பட்ட காரணம் கோரும் கடிதத்திற்கு ஜூலை 2 என தேதியிட்ட கடிதம் வழி அவர் தந்திருக்கும் விளக்கங்களை ஆராய்ந்த பிகேஆர் கட்சியின் அரசியல் குழு இந்த முடிவை எடுத்தது.

கடந்த மாதம் 20ஆம் தேதி மூலப் பொருள் தொழில் துணை அமைச்சரும் தகவல் பிரிவுத் தலைவருமான சம்சுல் இஸ்கந்தரின் தனிப்பட்ட செயலாளர் பொறுப்பிலிருந்து ஹஸிக் நீக்கப்பட்டார்.