சோல்: ராணுவத்தில் இருந்த தென்கொரிய ஆடவர், ஐஎஸ்ஐஎஸ் அமைப்பில் சேர்ந்து தாக்குதல் நடத்தத் திட்டமிட்டதன் தொடர்பில் விசாரிக்கப்பட்டு வருகிறார்.
தென்கொரியாவிலேயே பயங்கரவாதத் தாக்குதல் நடத்தும் நோக்கில் தனித்து இயங்கிய முதல் வழக்காக இது அமைந்துள்ளது. பார்க் என்ற குடும்பப் பெயர் கொண்ட அந்த 23 வயது ஆடவர், ராணுவப் பொறியியல் பள்ளியில் பயிற்சி பெற்று வந்தபோது வெடிபொருளைப் பற்றவைக்கும் சாதனம் ஒன்றைத் திருடியதாகக் கூறப்பட்டது. அத்துடன் ஐஎஸ்ஐஎஸ் அமைப்பின் பயங்கரவாத நடவடிக்கைகள் தொடர்பிலான காணொளிகளையும் தகவல்களையும் திரட்டி அவற்றைப் பரப்பும் நோக்கில் 2016ஆம் ஆண்டிலிருந்து இணையத்தில் பதிவேற்றம் செய்து வந்துள்ளார். வெடிமருந்தைத் தயாரிக்கும் காணொளி ஒன்றும் பார்க்கின் கைபேசியைச் சோதனையிட்டதில் கண்டுபிடிக்கப்பட்டது.

