பௌத்த பிக்குகளின் மாபெரும் கூட்டத்தையொட்டி நேற்று இலங்கையின் கண்டி நகர் பாதுகாப்பு வளையத்திற்குள் வந்தது. ஏராளமான போலிசார் நகர் முழுவதும் நிறுத்தப்பட்டிருந்த வேளையில் ராணுவமும் தயார்நிலையில் வைக்கப்பட்டு இருந்ததாக ராய்ட்டர்ஸ் செய்தி நிறுவனம் கூறியது.
ஏப்ரல் 21ஆம் தேதி ஈஸ்டர் தின தற்கொலைத் தாக்குதலுக்குப் பின்னர் இலங்கையில் நேற்று பெருங்கூட்டம் திரட்டப்பட்டது. 'பொது பால சேனா (பிபிஎஸ்)' என்னும் தேசியவாத குழுவின் தலைவர் ஞானசேர நாடு முழுவதும் உள்ள 10,000க்கும் மேற்பட்ட பௌத்த பிக்குகளுக்கு அழைப்பு விடுத்திருந்தார். பௌத்த சமயம் தழுவிய சிங்களர்களைக் கொண்ட அமைப்பு இது.
இவ்வாண்டின் பிற்பாதியில் நடைபெற இருக்கும் அதிபர் தேர்தலில் யாரை ஆதரிப்பது என்பதைத் தீர்மானிக்க பௌத்த பிக்குகள் ஒன்றுதிரண்டதாகக் கூறப்பட்டது. இலங்கையின் மொத்த மக்கள்தொகையில் கிட்டத்தட்ட 70 விழுக்காட்டினர் பௌத்த சமயத்தைச் சேர்ந்தவர்கள்.
ஆரஞ்சு நிற உடையில் காணப்பட்ட ஞானசேர கண்டி நகரில் பிரபலமான பௌத்த ஆலயங்களில் ஒன்றைத் தேர்ந்தெடுத்து அங்கு நேற்று அவர் சென்றார். புத்தரின் பற்கள் என்று நம்பப்படும் நினைவுச்சின்னம் ஒன்று அந்த ஆலயத்தில் உள்ளது.
முஸ்லிம்களுக்கு எதிராகக் கலவரத்தைத் தூண்டிய குற்றச்சாட்டை எதிர்நோக்கும் ஞானசேர நேற்று மாலை பௌத்த பிக்குகளின் கூட்டத்தில் உரையாற்றத் திட்டமிட்டிருந்தார்.
"அவசரநிலை நடப்பில் உள்ளதால் இந்தக் கூட்டத்தை முன்னிட்டு பாதுகாப்பு ஏற்பாடுகள் கடுமையாக்கப்பட்டு உள்ளன. போலிசாருக்கு ராணுவப் படையினர் உதவி புரிந்து வருகிறார்கள்," என்று ராணுவப் பேச்சாளர் சுமித் அட்டப்பட்டு தெரிவித்தார்.
பௌத்த பிக்குகளின் கூட்டம் தொடர்பாக அசம்பாவிதம் ஏதேனும் ஏற்பட்டால் அதனைச் சமாளிக்க ராணுவ வீரர்கள் தயார்நிலையில் வைக்கப்பட்டு உள்ளதாகவும் அவர் கூறினார். கலவரம் ஏற்படக்கூடும் என்ற அச்சத்தில் கடைகளும் உணவகங்களும் நேற்று அடைக்கப்பட்டிருந்தன. கண்டி நகர் முழுவதும் நேற்று பதற்றம் நிலவியது.
"ஏகப்பட்ட வெளி ஆட்கள் கண்டி நகருக்குள் குவிகிறார்கள். எதற்காக என்பதும் என்ன நடக்கப்போகிறது என்றும் தெரியவில்லை," என எம்.ஜே.எம். பைஃசால் என்னும் கடைக்காரர் கூறினார்.
இலங்கையில் அண்மைய வாரங்களாக முஸ்லிம்களுக்கு எதிரான வன்செயல்கள் அதிகரித்து வருவதாக ஊடகங்கள் குறிப்பிடுகின்றன. கடந்த ஆண்டு இதே கண்டி நகரில் வன்முறை வெடித்து பள்ளிவாசல் ஒன்று சூறையாடப்பட்டதோடு முஸ்லிம்களின் வீடுகளும் கடைகளும் சேதப்படுத்தப்பட்டன.

