ஹாங்காங்கில் நேற்றும் ஒரு மக்கள் பேரணி நடைபெற்றது. நாடுகடத்தலுக்கு எதிரான இந்தக் கண்டனப் பேரணி வெஸ்ட் கவ்லூன் நிலையத்தில் அமைதியாக முடிவுற்றது.
பல்லாயிரக்கணக்கான ஹாங்காங் மக்கள் பங்கேற்ற பேரணி சேலிஸ்பரி கார்டன் பகுதியில் தொடங்கி எப்போதும் சுறுசுறுப்பாக இயங்கும் சிம் ஷா சுயி பகுதி வழியாகச் சென்றது. சீனாவிலிருந்து வருவோருக்கு தங்களது கண்டனத்தை நேரடியாகத் தெரிவிக்கும் நோக்கில் அந்த வழியாக மக்கள் அணிவகுத்துச் சென்றனர்.
இதுரை நடத்தப்பட்ட பேரணிகளிலும் ஆர்ப்பாட்ட ஊர்வலங்களிலும் அரசாங்க எதிர்ப்பு முழக்கங்கள் எழுப்பப்பட்டன. ஆனால் நேற்றைய பேரணி அதற்கு மாறாக தொடக்கம் முதல் அமைதியாகவே நடைபெற்றது.
பேரணியில் பங்கேற்று நடந்து சென்றவர்கள் தங்களது கரங்களில் நாடுகடத்தலுக்கு எதிரான வாசகங்கள் அடங்கிய அட்டைகளை ஏந்தி இருந்தனர். மற்றபடி அவர்கள் முழக்கங்களை எழுப்பவோ ஆவேசச் செயல்களில் ஈடுபடவோ இல்லை. பேரணியின் நோக்கம் முழுவதும் சீன வருகையாளர்களின் கவனத்தை ஈர்ப்பதாகவே அமைந்து இருந்தது.
குறிப்பிட்ட சில குற்றங்களில் ஈடுபடுவோரை சீனாவுக்கு நாடு கடத்திச் சென்று விசாரிக்க அனுமதிக்கும் சர்ச்சைக்குரிய மசோதாவை முழுமையாகத் திரும்பப் பெற வேண்டும்; ஜூன் 12ஆம் தேதி நடைபெற்ற போராட்டத்தை கலவரம் என்று குத்தப்பட்ட முத்திரையை அகற்ற வேண்டும்; ஆர்ப்பாட்டக்காரர்களை துன்புறுத்திய போலிசாரிடம் விசாரணை நடத்த வேண்டும்; கைது செய்யப்பட்ட ஆர்ப்பாட்டக்காரர்களை உடனடியாக விடுதலை செய்ய வேண்டும்; அடுத்த ஆண்டுக்குள் வாக்குரிமை செயல்படுத்தப்பட வேண்டும் என்பன போன்ற கோரிக்கைகள் அடங்கிய அட்டைகளை அவர்கள் ஏந்திச் சென்றனர்.
பேரணியில் 230,000 பேர் கலந்துகொண்டதாக ஏற்பாட்டாளர்கள் கூறியவேளையில் கிட்டத்தட்ட 56,000 பேர் மட்டுமே பங்கேற்றதாக போலிசார் தெரிவித்தனர்.
பிற்பகல் 3.40 மணிக்குத் தொடங்கிய பேரணி சீனாவின் அதிவேக ரயில்கள் நிற்கும் வெஸ்ட் கவ்லூன் நிலையம் வரை சென்றது. இருப்பினும் அதில் கலந்துகொண்டவர்கள் நிலையத்திற்குள் சென்றுவிடாவண்ணம் போலிசார் தடுப்புகளை ஏற்படுத்தி இருந்தனர். தண்ணீர் நிரம்பிய பீப்பாய்களை சுமார் 2 மீட்டர் உயரத்திற்கு ரயில் நிலையத்தைச் சுற்றி அடுக்கி வைத்திருந்தனர்.

