இலங்கையின் ஆகச் செல்வாக்கு மிகுந்த பெளத்த தேசியவாதக் குழுவின் தலைவர், பெளத்தத்தை மையப்படுத்தும் தலைவர்களுக்கே வாக்களிக்கும்படி கேட்டுக்கொண்டுள்ளார். ஈஸ்டர் தின தாக்குதலுக்குப் பின்னர் இலங்கையின் பல-சமய உறவுகள் வலுவிழந்து வரும் நிலையில் 'பொத்து பால சேனா' கட்சியின் தலைவரும் பெளத்த துறவியுமான கலகோடா அத்தே ஞானசார இவ்வாறு கூறினார். இந்த இலக்கை அடைய இலங்கையிலுள்ள 10,000 புத்தர் கோவில்கள் உதவவேண்டும் என்றும் அவர் கோரியுள்ளார்.
"சிங்கள அரசாங்கத்தை அமைக்கும் குறிக்கோளை நம் சமயத் தலைவர்கள் கொண்டிருக்கவேண்டும். நாட்டு மக்களிடம் பொறுப்பான முறையில் நடந்துகொள்ளும் நாடாளுமன்றத்தை நாம் உருவாக்குவோம். சிங்களர்களைப் பாதுகாக்கும் நாடாளுமன்றமாக அது இருக்கும்," என்று ஞானசார தெரிவித்தார்.
இஸ்லாமிய அடிப்படைவாதத்தைப் போரிடும் வேலையை அரசியல்வாதிகள் பெளத்தத் துறவிகளிடம் விட்டுவிடவேண்டும் என்றும் ஞானசார தெரிவித்தார்.
"அவர்களுடன் கிராமங்களில் நேர்முகமாகப் பேசி, அடிப்படைவாதம் அற்ற இஸ்லாமிய பண்பாட்டை உருவாக்குவது குறித்து நாங்கள் பேச்சுவார்த்தை நடத்தலாம். இலங்கை சிங்கள நாடாக இருப்பதால் இது எங்கள் பொறுப்பு," என்று அவர் கூறினார்.

