பேங்காக்: தத்தளித்துக்கொண்டு இருக்கும் தாய்லாந்து சுற்றுப்பயணத் துறைக்கு இந்திய சுற்றுப்பயணிகள் கைகொடுத்து வருகின்றனர். புக்கெட் தீவுக்குச் செல்லும் சீனப் பயணிகளின் எண்ணிக்கை குறைந்துவரும் வேளையில், இந்தியாவிலிருந்து வரும் சுற்றுப்பயணிகளின் எண்ணிக்கை உயர்ந்திருக்கிறது.
"இப்போது புதிய வளர்ச்சி வாய்ப்பு ஒன்றை நாங்கள் காண்கிறோம். சீனர்கள் முன்பு செய்தது போல் தாய்லாந்து சுற்றுப்பயணத் துறையின் வளர்ச்சியை இந்தியர்கள் முன்னெடுத்துச் செல் கின்றனர்," என்று 'உ விஜிட்' கேளிக்கை விடுதியின் பொது நிர்வாகி கோங்சக் கூபொங்சகோர்ன் தெரிவித்தார்.
முன்னதாக, சீன சுற்றுப்பயணி களின் வருகையால் தாய்லாந்தின் சுற்றுப்பயணத் துறை ஆண்டுக்கு சுமார் 10 விழுக்காடு வளர்ச்சி அடைந்து வந்தது.
ஆனால் புக்கெட் தீவில் கடந்த ஆண்டு நிகழ்ந்த படகு விபத்தில் சீன நாட்டவர் 46 பேர் உயிரிழந்ததைத் தொடர்ந்து, மீண்டும் அசம்பாவிதம் நிகழ்ந்துவிடுமோ என்ற அச்சத்தில் சீன சுற்றுப்பயணிகளின் வருகை வெகுவாக குறைந்துள்ளது.
அத்துடன், தாய்லாந்துக்கு அந்நாட்டுப் பயணிகளின் வருகை குறைந்து காணப்படுவதற்கு மற்றொரு காரணம், சீனப் பொருளியல் மெதுவடைந்து வருவதே.
மற்றொரு புறம், இந்தியாவின் பொருளியல் வளர்ச்சியால் நடுத் தர வருமானப் பிரிவினரின் எண்ணிக்கையும் உயர்ந்து வரு கிறது. அத்துடன், தாய்லாந்துக்கும் இந்தியாவுக்கும் இடையிலான விமானச் சேவைகள் அதிகரித்து உள்ளதும் தாய்லாந்துக்குச் செல்ல இந்தியர்களுக்கான விசா தள்ளுபடி செய்யப்பட்டிருப்பதும் இந்திய சுற்றுப்பயணிகளின் எண்ணிக்கை உயர்வதற்கு முக்கிய காரணங்களில் சில.
தற்போது தாய்லாந்துக்கு வரும் சுற்றுப்பயணிகளில் 28 விழுக்காட்டினர் சீனர்களாகவும் நான்கு விழுக்காட்டினர் இந்தியர்களாகவும் உள்ளனர். ஆயினும், பத்து ஆண்டுகளில் இந்திய சுற்றுப்பயணிகளின் எண்ணிக்கை 15 விழுக்காடாக அதிகரிக்கும் என முன்னுரைக்கப்படுகிறது.

