ஜோகூர் பாரு: இளையர் என்பதற்கான வயது வரம்பை ஜோகூர் அரசாங்கம் 30 வயதாக மாற்றி அமைத்து உள்ளது. முன்னதாக, இளையருக்கான வயது வரம்பு 15 வயது முதல் 40 வயது வரை என்று சரவாக், சிலாங்கூர் மாநிலங்கள் பின்பற்றுவதைப்போல ஜோகூரும் தொடர்ந்து 40 வயது என்பதை இளையருக்கான வயது வரம்பாக் கடைப்பிடிக்கும் என்று ஜோகூர் அரசாங்கம் திங்கட்கிழமை அறவித்திருந்தது. இளையரின் வயதை 30 ஆகக் குறைக்க மத்திய கூட்டரசாங்கம் முயன்று வரும் வேளையில் ஜோகூர் இவ்வாறு அறிவித்திருந்தது.
இருப்பினும் அந்த அறிவிப்பு நேற்று அது தலைகீழாக மாறியது.
மாநில இளையர், விளையாட்டு, நிறுவன மேம்பாடு, கூட்டுறவுக் குழு ஆகியவற்றின் தலைவர் ஷேக் உமர் பகாரிப் அலி நேற்று இதனைத் தெரிவித்தார். ஜனநாயக செயல் கட்சியின் புதிய இளையர் பிரிவு தலைவருமான அவர் ஜோகூர் முதலமைச்சர் டாக்டர் ஷாருதீன் ஜமால் தலைமையிலான ஆலோசனைக் கூட்டத்திற்குப் பின்னர் வயது வரையறை குறித்த முடிவு எடுக்கப்பட்டதாக அவர் கூறினார்.
15 வயதுக்கும் 30 வயதுக்கும் இடைப்பட்டவர்களை இளையர் என்று வரையறுக்கும் மாற்றத்தை மாநில அரசாங்கம் வரவேற்பதாக அவர் சொன்னார். அடித்தள அமைப்புகள் வெளிப்படுத்திய ஆதங்கத்தைத் தொடர்ந்து வயது வரையறை குறித்த விவகாரம் எழுப்பப்பட்டதாகவும் அவர் கூறினார்.

