வாஷிங்டன்: அமெரிக்க அதிபர் டோனல்ட் டிரம்ப் குறித்துத் தனது மின்னஞ்சல்களில் விமர்சித்த அமெரிக்காவுக்கான இங்கிலாந்து தூதர் கிம் டிரோச் பதவி விலகியுள்ளார்.
இங்கிலாந்து தூதர் கிம் டிரோச் அனுப்பபியதாகக் கருதப்படும் மின்னஞ்சல்களில் அமெரிக்க அதிபரைத் திறமையற்றவர், தகுதி யற்றவர் மற்றும் பாதுகாப்பற்றவர் என அவர் விவரித்துள்ளார்.
அத்துடன் அமெரிக்க குடியரசுத் தலைவரின் வெள்ளை மாளிகை பிளவுபட்டுள்ளது எனவும் இந்த மின்னஞ்சல்களில் குறிப்பிடப்பட்டுள்ளது.
இந்த ரகசிய மின்னஞ்சல்கள் யாரோ ஒருவரால் பகிரங்கப் படுத்தப்பட்டதைத் தொடர்ந்து, தூதரை அமரிக்க அதிபர் டிரம்ப் கடுமையாக விமர்சித்ததுடன் தனது நிர்வாகம் தூதருடன் இணைந்து பணியாற்றாது எனவும் தெரிவித்திருந்தார்.
ஆனாலும் கிம் டிரோச்சின் கருத்துகளுடன் உடன்படாத போதும் அவருக்குப் பூரண ஆதரவு வழங்குவதாக இங்கிலாந்து பிரதமர் தெரேசா மே அறிவித்திருந்தார்.
ஆனால், இங்கிலாந்தின் அடுத்த பிரதமராக வரக்கூடும் என்று எதிர்பார்க்கப்படும் போரிஸ் ஜான்சன் கிம் டிரோச்சிற்கு ஆதரவு தெரிவிக்க மறுத்துவிட் டார்.
இந்நிலையில் அமெரிக்காவுக் கான பிரிட்டிஷ் தூதர் பதவி யிலிருந்து விலகுவதாக கிம் டிரோச் நேற்று அறிவித்தார்.
இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், "இந்தத் தூதரகத்திலிருந்து உத்தியோகபூர்வ ஆவணங்கள் கசிந்ததிலிருந்து எனது நிலைப்பாடு மற்றும் எனது மீதமுள்ள பதவிக்காலம் குறித்து ஏராளமான ஊகங்கள் உள்ளன.
தூதராக நான் அந்த ஊகங்கள் அனைத்துக்கும் முற்றுப்புள்ளி வைக்க விரும்புகிறேன். தற்போதைய சூழ்நிலையில் நான் விரும்பியபடி எனது பங்கைச் செய்ய இயலாது.
எனது பதவி இந்த ஆண்டு இறுதி வரை முடிவடையாது என்றாலும் தற்போதைய சூழ்நிலைகளில் புதிய தூதர் ஒருவரை நியமிக்க அனுமதிப்பதே சிறந்தது.
இந்தக் கடினமான சில நாட்களில் தங்கள் ஆதரவை வழங்கிய பிரிட்டன் மற்றும் அமெரிக்காவில் உள்ள அனை வருக்கும் நான் நன்றியுள்ளவனாக இருக்கிறேன் எனத் தெரி வித்துள்ளார்.

