எலியின் மலமும் இறந்த பல்லிகளும் காணப்பட்ட பிரியாணி உணவகம் மூடல்

மலேசியாவின் பினாங்கு மாநிலத்தில் பிரபலமான ஓர் இந்திய உணவகத்தின் சமையலறையில் எலியின் மலமும் இறந்த பல்லிகளும் காணப்பட்டதை அடுத்து  அதிகாரிகள் அந்த உணவகத்தை மூடும்படி உத்தரவிட்டுள்ளனர். 

லெபு சூலியா சாலையிலுள்ள அந்த உணவகத்திற்கு நேற்று சென்றிருந்த அதிகாரிகள், சமையலறை மிகவும் அசுத்தமாக இருந்ததைக் கண்டனர். 

இத்துடன் இரண்டாவது முறையாக மூட உத்தரவிடப்பட்டுள்ள அந்த உணவகத்தின் பெயர் தற்போது உறுதி செய்யப்படவில்லை.

மூன்று நாட்களுக்குப் பிறகு உணவகம் தூய்மையாக இருந்தால் அதனைத் திறக்க அதிகாரிகள் அனுமதிப்பர் என்று ‘த ஸ்டார்’ பத்திரிகை தெரிவித்துள்ளது.